கோவையில் மலரும் நினைவுகள் சீருடையில் பள்ளி வந்த முன்னாள் மாணவர்கள் 27 ஆண்டுகளுக்கு பின் நண்பர்களை சந்தித்து மகிழ்ந்தனர்
கோவையில் 27 ஆண்டுகளுக்கு பின் தாங்கள் படித்த பள்ளிக்கு சீருடையில் வந்த முன்னாள் மாணவர்கள் தங்களது நண்பர்களை சந்தித்து, வகுப்பறையில் அமர்ந்து தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
கோவை,
மனிதனின் வாழ்வில் மறக்க முடியாத பருவம் என்றால் அது பள்ளி பருவம். ஆசிரியர்கள் தங்களது கையை பிடித்து எழுத வைத்தது முதல், குறும்புகள் செய்து அடி வாங்கியது வரை அனைத்தும் இந்த பள்ளி நாட்களில் நம் மனதில் பதிந்து விடுகிறது. பள்ளி பருவத்தை நினைவு கூறும் வகையில் சமீபத்தில் வெளிவந்த 96 என்ற படம் பெரிய வெற்றியை பெற்றதுடன், அனைவரின் பள்ளி நாட்களையும் திரும்பி பார்க்க வைத்தது.
இதேபோன்று கோவை சுங்கத்தில் உள்ள கார்மல் கார்டன் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 27 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பள்ளிக்கு சீருடையில் வந்து ஆசிரியர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற் காக அமெரிக்கா,லண்டன், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் முன்னாள் மாணவர்களும் வந்திருந்தனர்.நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் பால்ராஜ் அடிகள் தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் கடந்த 1980-ம் ஆண்டு பள்ளியில் சேர்ந்து 92-ம் ஆண்டு பள்ளி இறுதி படிப்பை படித்து வெளியேறிய 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அப்போதைய சீருடையான காக்கி நிற பேண்ட் மற்றும் வெள்ளை நிற சட்டை அணிந்து வந்தனர். மேலும் பள்ளி வளாகத்தில் காலை நேர பிரார்த்தனைக்கு மாணவர்கள் அணிவகுத்து நிற்பது போல் நின்றனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு பாடம் கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் 52 பேருக்கு தலா 100 கிராம் வெள்ளி நாணயம் வழங்கியதுடன், பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். மேலும் பள்ளிக்கு 75 மின்விசிறிகளும், பள்ளி ஆசிரியர்களின் ஓய்வு நிதிக்கு ரூ.1½ லட்சம் நிதி உதவியும் அளித்தனர்.
அவர்கள் படித்த காலத்தில் பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வகுப்பறையில் அவர்களுக்கு பாடம் எடுத்து மகிழ்ந்தனர். அப்போது அவர்கள் படிக்கும் காலத்தில் ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கிய தண்டனைகள், வகுப்பறையில் நிகழ்ந்த சுவாரசியமான சம்பவங்களை நினைவு கூர்ந்தனர். இதையடுத்து பள்ளி மைதானத்தில் கால்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் சங்க தலைவர் நந்தகுமார், ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணா நந்தா, ரெக்ஸ் ஓய்வு பெற்ற மூத்த ஆசிரியர்கள் ஜெயராமன், ஜோ தன்ராஜ், மைக்கேல் சாமி,அமல்ராஜ், ரொமால்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.