அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசாக வழங்க வேண்டும்; பாரதீய ஜனதா வலியுறுத்தல்

அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கவேண்டும் என்று பாரதீய ஜனதா தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2019-01-05 23:30 GMT

புதுச்சேரி,

புதுவை மாநில பாஜ.க. தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:–

இந்திய அளவில் விலைவாசி தற்போது குறைந்துகொண்டே வருகிறது. பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைந்துள்ளது. ஆனால் சில தோல்வி அடைந்த தொழிற்சங்கங்கள், லெட்டர்பேடு அமைப்புகள் விலைவாசி உயர்வினை கண்டித்து 8, 9–ந்தேதிகளில் வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளன. முதல்–அமைச்சர் நாராயணசாமி ஆதரவோடு நடைபெற உள்ள இந்த போராட்டங்களை கண்டிக்கிறோம்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி முழுஅடைப்பு போராட்டம் நடத்தியபோது போலீசாரே கடைகளை அடைக்க சொன்னார்கள். ஆனால் பாரதீய ஜனதா முழுஅடைப்புக்கு அழைப்பு விடுத்தபோது முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று கூறி பாரதீய ஜனதா நிர்வாகிகளை கைது செய்தனர். அதேபோல் இப்போதும் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளவர்களை கைது செய்யவேண்டும். இந்த போராட்டங்களை மக்கள் புறக்கணிக்கவேண்டும்.

டெல்லியில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் நடந்த போராட்டத்தில் காங்கிரஸ் அமைச்சரான மல்லாடி கிருஷ்ணாராவ் கலந்துகொள்ளவில்லை. இது அவர்களிடம் ஒற்றுமையின்மையை காட்டுகிறது.

சபாநாயகர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர். ஆனால் இந்த போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம் தற்போது காங்கிரஸ் கட்சிக்காரர் போல் செயல்படுகிறார். இது சட்டமன்ற ஜனநாயக மாண்புகளை மீறிய செயல்.

புதுவையில் 5 கவர்னர்கள் இருப்பதாக முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்டதுபோல் படிக்காத, ஒன்றும் தெரியாதவர் இல்லை கவர்னர் கிரண்பெடி. உண்மையில் 5 முதல்–அமைச்சர்கள்தான் உள்ளனர். மேலும் கூட்டணி கட்சியான தி.மு.க.வும் முதல்–அமைச்சர் போன்று மிரட்டுகிறது.

அனைவருக்கும் இலவச அரிசி வழங்கவேண்டும் என்பது எங்களுக்கு ஏற்புடையதல்ல. அதேநேரத்தில் பொங்கல் பரிசு என்பது அதில் இருந்து மாறுபட்டது. எனவே அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கவேண்டும். அதற்கு கவர்னர் கிரண்பெடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.

மேலும் செய்திகள்