மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேர் கைது

புதுவையில் இளைஞர்கள், மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-01-05 22:45 GMT
புதுச்சேரி,

புதுவையில் கஞ்சா விற்பனை கொடிகட்டி பறக்கிறது. இதை புகைக்கும் இளைஞர் சமுதாயம் தீய வழியில் சென்று கொண்டிருக்கிறது. தற்போது பள்ளிக்கூட மாணவர்களும் இதன் பிடியில் சிக்கியுள்ளனர்.

வெளியூர்களில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து புதுவையில் சிறு சிறு பொட்டலங்களாக மாற்றி அதனை விற்பனை செய்து வருகின்றனர். சமீப காலமாக குற்ற செயல்களில் ஈடுபட்ட இளைஞர்களை பிடித்து விசாரித்தபோது அவர்களில் பெரும்பாலானவர்கள் கஞ்சாவுக்கு அடிமையானவர்கள் என்பது தெரியவந்தது. இதையொட்டி கஞ்சா விற்பனையை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டது.

இந்தநிலையில் புதுவை கதிர்காமம் ஆனந்தாநகர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் ஒரு வீட்டில் திடீரென சோதனை நடத்தி னர். அப்போது அங்கிருந்து 3 வாலிபர்கள் தப்பியோட முயன்றனர்.

ஆனால் அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் முத்திரையர்பாளையம் காந்தி வீதியை சேர்ந்த சந்தோஷ் (20), மூலக்குளம் ஜே.ஜே.நகர் ஷேம்ஜோஸ் (19), சேத்தியாதோப்பு கனகராஜ் (20) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது 53 சிறு சிறு பாக்கெட்டுகளில் சுமார் 460 கிராம் கஞ்சா பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா, மோட்டார் சைக்கிள், 3 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்