பல்நோக்கு ஊழியர்களை வைத்து ஏரிகளை சுத்தம் செய்ய வேண்டும்; கவர்னர் அறிவுறுத்தல்
பொதுப்பணித்துறை பல்நோக்கு ஊழியர்களை வைத்து ஏரிகளை சுத்தம் செய்ய கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தினார்.;
புதுச்சேரி,
புதுவை கவர்னர் கிரண்பெடி பதவியேற்ற சில நாட்களில் வேல்ராம்பட்டு ஏரியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஏரியில் குப்பை கொட்டப்பட்டு திறந்தவெளி கழிப்பிடமாக அசுத்தமாக காட்சியளிப்பதை கண்ட அவர் ஏரியை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தார். அதன்படி ஏரியை சுற்றிலும் பெரும்பாலான இடங்களில் வேலி அமைக்கப்பட்டது.
மாணவர்கள், சுய உதவி குழுக்கள் மற்றும் தன்னார்வலர்களை கொண்டு சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டார். அதுமட்டுமின்றி ஏரியில் சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் படகு விடவும் ஏற்பாடு செய்தார்.
இந்தநிலையில் நேற்று அவர் மீண்டும் சைக்கிளில் சென்று ஏரியில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது கவர்னரின் கூடுதல் செயலாளர் சுந்தரேசன், சுற்றுலத்துறை இயக்குனர் முகமது மன்சூர், புதுவை நகராட்சி ஆணையர் ஆதர்ஷ், செயற்பொறியாளர் சேகரன், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் தாமரை புகழேந்தி, வனத்துறை துணை இயக்குனர் குமாரவேல் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
அப்போது பாதுகாப்பு வேலி போடப்படாமல் இருந்த பகுதிகளில் வேலி அமைக்க வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஏரியில் மேம்பாட்டு பணிகளை புதுவை நகராட்சி, சுற்றுலாத்துறை, வனத்துறை ஆகியன இணைந்து செயல்படுத்துமாறு அறிவுறுத்தினார். ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின்கீழ் அதற்கான பணிகளை மேற்கொள்ளவும் கேட்டுக்கொண்டார்.
கிருமாம்பாக்கம் ஏரி, பாகூர் ஏரி, கனகன் ஏரி ஆகிய ஏரிகளை சுத்தப்படுத்தவும் கூறினார். இதற்கு வழக்கம்போல் டெண்டர் விடாமல் பொதுப்பணித்துறை பல்நோக்கு ஊழியர்களை வைத்து பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
புதுவையின் புதிய ரெயில்நிலையம் வேல்ராம்பட்டு, உழந்தை ஏரிப்பகுதியில் அமையும் வாய்ப்பு உள்ளதால் நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்த வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.