வால்பாறையில் பள்ளிக்கூடத்தை சூறையாடிய காட்டு யானைகள் வனத்துறையினர் ரோந்து செல்ல கோரிக்கை

வால்பாறையில் காட்டு யானைகள் பள்ளிக்கூடத்தை சூறையாடின. இதை தொடர்ந்து வனத்துறையினர் ரோந்து செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-01-05 22:15 GMT
வால்பாறை, 

வால்பாறை சுற்று வட்டாரத்தில் உள்ள எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. கடுமையான பனிப்பொழிவும், வெப்பமும் நிலவி வருவதால் ஆங்காங்கே உள்ள நீரோடைகள், ஆறுகளில் தண்ணீர் குறைந்ததால் யானைகள் தண்ணீர் தேடி ஒவ்வொரு வனப்பகுதிகளாக இடம் பெயர்ந்து சென்று வருகின்றன. இவ்வாறு சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதியில் முகாமிட்டிருந்த 3 குட்டிகளுடன் ஒரு யானை சிங்கோனா எஸ்டேட் 2-வது பிரிவு குடியிருப்பு பகுதிக்குள் நேற்று அதிகாலை நுழைந்துள்ளது.

இந்த யானைகள் கூட்டமாக சிங்கோனா எஸ்டேட் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்துக்குள் புகுந்து அங்கு வகுப்பறை ஜன்னலை உடைத்து சேதப்படுத்தியது. பின்னர் பள்ளிக்கூடத்தின் அலுவலகம் சென்ற யானைகள் அங்கிருந்த ஆசிரியர்களின் அறையின் கதவை உடைத்து உள்ளே இருந்த அனைத்து பாட புத்தகம், நாற்காலி உள்பட அனைத்தையும் வெளியே எடுத்து வீசியும், மிதித்தும் சூறையாடின.

இந்த நிலையில் நேற்று காலை பள்ளிக்கூடத்துக்கு வந்த மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தலைமை ஆசிரியை பகவதி, மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். வனச்சரகர் நடராஜன் உத்தரவின் பேரில் வனக்காப்பாளர் சங்கர் தலைமையில் வேட்டைத்தடுப்பு காவலர்கள் பள்ளிக்கூடத்துக்கு வந்து சேதமடைந்த இடங்களை பார்வையிட்டனர்.

பின்னர், பள்ளிக்கூடத்துக்கு இரவு நேர காவலாளியை பணிக்கு அமர்த்த வேண்டும். அப்போதுதான் யானைகள் பள்ளிக்கூட வளாகத்துக்கு வருவது குறித்து வனத்துறைக்கு தெரியப்படுத்த முடியும். இதன் மூலம் இதுபோன்ற தாக்குதலை தடுக்கலாம் என்று தலைமை ஆசிரியையிடம் வனத்துறையினர் தெரிவித்தனர்.

தொடர்ந்து வனத்துறையினர் பள்ளிக்கூட வளாகத்தை சுற்றி பாதுகாப்பு பணி மேற்கொண்டனர். அப்போது பள்ளிக்கூடத்தின் முன்புள்ள வனப்பகுதிக்குள் 4 யானைகளும் முகாமிட்டு நின்றது தெரிந்தது. இதனை தொடர்ந்து தலைமை ஆசிரியை கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுலவருக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து மதியம் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு மாணவ- மாணவிகள் வனத்துறையினரின் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த பள்ளிக்கூடத்துக்கு பல ஆண்டுகளாக இரவு நேர காவலாளி பணியிடம் காலியாக உள்ளது. பள்ளிக்கூடம் குடியிருப்பு பகுதியில் இருந்து ஒதுக்குப்புறமாக இருப்பதாலும், வனப்பகுதியை ஓட்டியிருப்பதாலும் யானைகள் இரவு நேரங்களில் பள்ளிக்கூடத்துக்குள் நுழைவது தெரிவதில்லை. இதனால் பலமுறை இந்த பள்ளிக்கூடத்தை காட்டு யானைகள் சூறையாடி உள்ளன.

இந்த நிலையில் சிங்கோனா டேன்டீ கோட்ட மேலாளர் சிவக்குமாரிடம் எஸ்டேட் நிர்வாகம் சார்பில் பள்ளிக்கூடத்துக்கு இரவு காவலாளி நியமிக்க தலைமை ஆசிரியை பகவதி கேட்டுக்கொண்டார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பள்ளி கல்வி துறை சார்பில் வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் இரவு நேர காவலாளி நியமிக்க வேண்டும்.

வனத்துறையினர் இரவு நேரத்தில் பள்ளி பகுதியில் ரோந்து செல்ல வேண்டும். யானைகள் வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் ஆசிரியர்கள் கழகத்தினர், பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்