பொள்ளாச்சியில் பஸ் மோதி விபத்து தலை நசுங்கி பெண் சாவு கணவர் கண்முன்னே பரிதாபம்

பொள்ளாச்சியில் பஸ் மோதிய விபத்தில் சக்கரம் ஏறி தலை நசுங்கி கணவர் கண்முன்னே பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2019-01-05 22:45 GMT
பொள்ளாச்சி, 

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பொள்ளாச்சி அருகே திவான்சாபுதூரைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவர், பொள்ளாச்சி நாச்சிமுத்து கவுண்டர் வீதி மற்றும் டி.கோட்டாம்பட்டி ஆகிய இடங்களில் தையல் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கனகம் (வயது 60). நேற்று மதியம் கணவன், மனைவி இருவரும் திவான்சாபுதூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் பொள்ளாச்சிக்கு வந்தனர்.

அவர்கள் காந்தி சிலை போக்குவரத்து சிக்னலில் வந்து நின்றனர். பின்னர் சிக்னல் கிடைத்ததும் முத்துசாமி மோட்டார் சைக்கிளை இயக்கினார். அவர் புதிய திட்ட சாலையில் சிறிது தூரம் சென்ற நிலையில் பொள்ளாச்சியில் இருந்து தாராபுரம் நோக்கி புறப்பட்ட அரசு பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் முத்துசாமி சென்ற மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியது. அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழாமல் இருக்க முயன்றார். ஆனால் மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்து இருந்த கனகம் எதிர்பாராத விதமாக சாலையில் கீழே விழுந்தார். கண் இமைக்கும் நேரத்தில் கனகம் மீது பஸ்சின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தன் கண்முன்னே மனைவி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்தமுத்துசாமி கதறி துடித்தார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய தாராபுரத்தை சேர்ந்த பஸ் டிரைவர் சரவணன் (40) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்