கடையநல்லூரில் அனைத்துக்கட்சியினர் உண்ணாவிரத போராட்டம்

கடையநல்லூரில் நேற்று அனைத்துக் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.;

Update: 2019-01-05 22:00 GMT
கடையநல்லூர், 

கடையநல்லூரில் நேற்று அனைத்துக் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

உண்ணாவிரத போராட்டம்

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் புதிய தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கியது. இதையடுத்து காசிதர்மம்-கடையநல்லூர் இடையே புதிதாக இடம் தேர்வு செய்யப்பட்டு புதிய தாலுகா அலுவலகம் கட்டும் பணிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் புதிதாக தாலுகா அலுவலகம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடம், சமூக நல வனக்காட்டு பகுதியில் அமைந்துள்ளது. பஸ் வசதி இல்லாத, பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத, பாதுகாப்பு இல்லாத இடத்தில் உள்ளதால் இதற்கு கடையநல்லூர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக முகம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ. தலைமையில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. இந்த நிலையில் கடையநல்லூர் பஸ்நிலையம் அருகே நேற்று அனைத்து கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் செய்யது சுலைமான் தலைமை தாங்கினார்.

முகம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ.

போராட்டத்தில் முகம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் பேசுகையில், “புதிதாக தேர்வு செய்யப்பட்ட இடத்துக்கு பதில், யூனியன் அலுவலகம் பின்புறமாக உள்ள 7 ஏக்கர் அரசு நிலத்தில் புதிய தாலுகா அலுவலகம் கட்ட வேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து போராட்டம் நடைபெறும்“ என்றார்.

போராட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்