பொங்கல் பண்டிகையையொட்டி சுற்றுலா தலங்களில் கூடுதல் பாதுகாப்பு போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் தகவல்

நெல்லை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி சுற்றுலா தலங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமார் தெரிவித்தார்.

Update: 2019-01-05 21:30 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி சுற்றுலா தலங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமார் தெரிவித்தார்.

தீத்தடுப்பு ஒத்திகை

பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை மாவட்ட ஆயுதப்படையில் தீயணைப்பு துறை சார்பில் தீத் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார் முன்னிலை வகித்தார்.

பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் மற்றும் தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் கலந்து கொண்டு தீயணைப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர். இதில் தீப்பிடித்தால் தீயணைப்பு கருவிகள் மூலம் எப்படி தீயை அணைப்பது, தீப்பிடித்தவர்களை எப்படி காப்பாற்றுவது, மீட்பு பணியில் எப்படி ஈடுபட வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் போலீசார், அமைச்சு பணியாளர்கள், போலீசாரின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க

நெல்லை மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வருகிற 10-ந் தேதி பசுபதி பாண்டியன் நினைவு நாள் கடைபிடிக்கப்படுகிறது. அன்று போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. வாகனங்களை முறைப்படுத்த கூடுதல் சோதனை சாவடி அமைக்கப்படுகிறது. சந்தேகப்படும் படியாக யாராவது வந்தால், அவர்களை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. கடந்த ஆண்டு நடந்த விளையாட்டு போட்டிகளில் எந்தந்த ஊர்களில் தகராறு ஏற்பட்டதோ, அந்த ஊர்களில் இரு தரப்பினரையும் அழைத்து பேசி சுமூகமாக தீர்வு காண ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. பொங்கல் பண்டிகையையொட்டி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக காணும் பொங்கல் அன்று சுற்றுலா தலங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்