தொழிலாளியை கொலை செய்த நண்பருக்கு 10 ஆண்டு சிறை திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பு

திருப்பூரில் பனியன் நிறுவன தொழிலாளி அடித்துக்கொலை செய்த வழக்கில் அவரது நண்பருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2019-01-05 22:45 GMT

திருப்பூர்,

திருப்பூர் பெரிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 36). அதே பகுதியை சேர்ந்தவர்கள் வெள்ளை ராஜா என்ற ராஜேந்திரன் (36), கருப்புராஜா (36). இவர்கள் 3 பேரும் நண்பர்கள். அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 17–5–2015 அன்று 3 பேரும் பனியன் நிறுவனத்தில் இருந்து சம்பள பணத்தை பெற்றனர். அப்போது அருகில் உள்ள டீக்கடையில் ரூ.250 கொடுப்பது தொடர்பாக 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், கருப்புராஜா ஆகியோர் பால்பாண்டியை தாக்கியுள்ளனர்.

இது குறித்து பால்பாண்டி மற்றும் அவரது மனைவி கமலாவதி, மகன் ஆகியோர் ராஜேந்திரன் வீட்டிற்கு சென்று தட்டிக் கேட்டுள்ளனர். அப்போதும் பால்பாண்டியை அங்கிருந்த ராஜேந்திரன், கருப்பு ராஜா ஆகியோர் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த பால்பாண்டி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜேந்திரன், கருப்புராஜா ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்து கொண்டிருந்தது. இதற்கிடையே கருப்புராஜா இறந்துவிட்டார்.

இதனால் ராஜேந்திரன் மீது மட்டும் வழக்கு விசாரணை நடந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நீதிபதி கோகிலா தீர்ப்பளித்தார். அப்போது இந்த கொலை சம்பவம் கொலை செய்யும் நோக்கத்தோடு நடைபெறாததால், ராஜேந்திரனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் சத்திய நாராயணன் ஆஜராகியிருந்தார்.

மேலும் செய்திகள்