5 ஆண்டுகளுக்கும் மேல் எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அறிவுரை
5 ஆண்டுகளுக்கும் மேல் எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லை என்ற நிலையை வக்கீல்களும், வழக்கு நடத்துபவர்களும் உருவாக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அறிவுரை வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ரூ.19 கோடியே 70 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள நீதிமன்ற கூடுதல் கட்டிடம், நீதிபதிகள் குடியிருப்பு, குடும்ப நீதிமன்றம், கூடுதல் மகிளா நீதிமன்றம், ஓசூர் கூடுதல் சார்பு நீதிமன்ற கட்டிடம், தேன்கனிக்கோட்டை கூடுதல் மாவட்ட முனிசீப் நீதிமன்ற கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி விஜய கமலேஷ் தகில்ரமணி தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி புதிய நீதிமன்ற கட்டிடங்களை திறந்து வைத்தார். சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி. கிருஷ்ணவள்ளி, தமிழக இளைஞர்் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, மாவட்ட கலெக்டர் டாக்டர் எஸ்.பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக விழாவிற்கு வந்தவர்களை மாவட்ட முதன்மை நீதிபதி கலாவதி வரவேற்று பேசினார்.
விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி விஜய கமலேஷ் தகில்ரமணி பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமமான தொரப்பள்ளியில் பிறந்து வழக்கறிஞர் ஆன ராஜாஜி சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ஆவார். மேலும் சென்னை மாகாணத்தில் முதல்-அமைச்சராக இருந்தார். இதே போல இந்த மாவட்டத்தில் வழக்கறிஞராக பணியாற்றியவர்கள் பலரும் உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பணிபுரிந்துள்ளனர்.
நீதிமன்றத்தில் வழக்குகள் தேங்குவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதை கருத்தில் கொண்டு கூடுதல் சார்பு நீதிமன்றம், கூடுதல் மகிளா நீதிமன்றம் தொடங்கப்பட்டு வழக்குகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விரைவில் வழக்குகளை முடித்து வைக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி வக்கீல்களும், வழக்குகளை நடத்துபவர்களும் தங்கள் வழக்குகளை முடித்து 5 ஆண்டுகளுக்கு மேல் எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், நீதிபதிகள் பாலசுப்பிரமணியன், அறிவொளி, தஸ்னீம், ஜெயப்பிரகாஷ், சாந்தி, கிருஷ்ணகிரி வக்கீல் சங்க தலைவர் அசோக் ஆனந்த், ஓசூர் வக்கீல் சங்க தலைவர் சிவசங்கர், செயலாளர் கதிரவன் மற்றும் நீதிபதிகள், அரசு வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.