பயிர்க்காப்பீடு தொகை வழங்கக்கோரி மத்திய கூட்டுறவு வங்கியை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை

பயிர்க்காப்பீடு தொகை வழங்கக்கோரி திருத்துறைப்பூண்டியில் மத்திய கூட்டுறவு வங்கியை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-01-05 23:00 GMT
திருத்துறைப்பூண்டி,

கஜா புயலால் திருவாரூர், நாகை, தஞ்சை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. விவசாயிகள் தங்கள் வீடுகளை இழந்து இருக்க இடமின்றி தவித்து வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகள் கடன் பெற்றும், தங்களிடம் இருந்த நகைகளை அடகு வைத்தும், விவசாயம் செய்த நெற்பயிர்கள் புயலால் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் 2017-18-ம் ஆண்டிற்கான பயிர்க்காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி திருத்துறைப்பூண்டியில் உள்ள கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர் ஞானமோகன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சந்திரராமன், ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஒன்றிய செயலாளர் பாஸ்கர், நகரச்செயலாளர் முருகேசன், ஒன்றிய துணை செயலாளர் பாலு, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ஜெயபால், நகர தலைவர் வாசுதேவன், நகர செயலாளர் சுந்தர் முன்னாள் ஊராட்சி தலைவர் மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

இதை தொடர்ந்து கூட்டுறவு வங்கி அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்