அந்தியூர் அருகே பவானி ஆற்றில் பிணமாக மிதந்தது பள்ளிக்கூட மாணவிகள் தற்கொலையா? போலீஸ் விசாரணை

அந்தியூர் அருகே பவானி ஆற்றில் பிணமாக மிதந்தது பள்ளிக்கூட மாணவிகள் என்பது தெரிய வந்தது. அவர்கள் தற்கொலை செய்து கொண்டனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-01-05 23:30 GMT

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கீழ்வானி காமாட்சியம்மன் கோவில் பகுதியில் செல்லும் பவானி ஆற்றில் கடந்த 3–ந்தேதி சிறுமியின் பிணம் ஒன்று மிதந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதனைப்பார்த்து ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணமாக மிதந்த சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல் நேற்று முன்தினம் அந்தியூர் அருகே உள்ள வளையபாளையம் பகுதியில் செல்லும் பவானி ஆற்றில் பிணமாக மிதந்த சிறுமியின் உடலையும் ஆப்பக்கூடல் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் பவானி ஆற்றில் பிணமாக மிதந்த 2 சிறுமிகள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர்கள் 2 பேரும் அந்தியூர் அருகே உள்ள புதுக்காடு காந்தி நகர் பகுதியை சேர்ந்த ஆறுச்சாமி என்பவருடைய மகள் ஓவியா (14) மற்றும் கழுதைப்பாளி பகுதியை சேர்ந்த கரியன் என்பவருடைய மகள் சுகந்தி (16) என்பதும், இவர்கள் 2 பேரும் காந்திநகர் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் படித்து வந்ததும், இருவரும் தோழிகள் என்பதும் தெரிய வந்தது. இதில் ஓவியா 8–ம் வகுப்பும், சுகந்தி 10–ம் வகுப்பும் படித்து வந்துள்ளனர்.

மேலும் கடந்த 1–ந்தேதி சுகந்தியும், ஓவியாவும் கீழ்வானியில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு வருவதாக பெற்றோரிடம் கூறிச்சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் அன்று இரவு வீடு திரும்பாததால் பெற்றோர்கள் இதுபற்றி ஆப்பக்கூடல் போலீசில் மகள்கள் மாயமானதாக புகார் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவிகள் 2 பேரும் பவானி ஆற்றில் தவறி விழுந்து இறந்தார்களா? அல்லது ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்களா? அல்லது அவர்களது சாவுக்கு வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் சுகந்தி மற்றும் ஓவியாவின் உடல் மீண்டும் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்