ஜல்லிக்கட்டு நடத்த வங்கா நரியை பிடித்தால் 7 ஆண்டுகள் சிறை மாவட்ட வன அலுவலர் எச்சரிக்கை

சேலம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த யாரேனும் வங்கா நரியை பிடித்து துன்புறுத்தினால் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என வன அலுவலர் பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2019-01-05 22:00 GMT
சேலம், 

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

சேலம் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வாழப்பாடி, ஆத்தூர் பகுதியில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து வங்கா நரியை பிடித்து வந்து, அதற்கு பூஜை செய்து ஜல்லிக்கட்டு நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

1972-ம் ஆண்டு வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி வங்கா நரி, பட்டியல் 2-ல் வருவதால், அதனை பிடித்து ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே வங்கா நரியை பிடிப்பதோ? துரத்துவதோ? அல்லது ஜல்லிக்கட்டு நடத்துவதோ? தெரியவந்தால் வனத்துறையால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கு முந்தைய ஆண்டுகளில் வாழப்பாடி, ஆத்தூர் வனப்பகுதியில் வங்கா நரியை பிடித்து வந்து ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்தாண்டும் வங்கா நரியை யாராவது பிடித்து துன்புறுத்துவது தெரியவந்தால், வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி வழக்குப்பதிவு செய்வதோடு அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது, வங்கா நரியை பிடித்தால் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்