திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்: “டாஸ்மாக் மதுபான கொள்முதலில் வெளிப்படை தன்மை இல்லை”

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் மதுபான கொள்முதலில் வெளிப்படை தன்மை இல்லை என மாநில தலைவர் பெரியசாமி தெரிவித்தார்.

Update: 2019-01-04 22:45 GMT
திருச்சி,

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் பணியாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்க வேண்டும், டாஸ்மாக் பணியாளர்களின் பணியை நிரந்தரமாக்க வேண்டும், மூடப்பட்ட கடைகளில் பணியாற்றியவர்களுக்கு பிற துறைகளில் காலிப்பணியிடங்களில் நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் மண்டல அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி ஆர்ப்பாட்டம் நடத்த டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று மாலை திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே திரண்டனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பெரியசாமி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் தனசேகரன் தொடக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த சங்கத்தை சேர்ந்த டாஸ்மாக் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாநில தலைவர் பெரியசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-

டாஸ்மாக் மூலம் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருமானம் அரசுக்கு கிடைக்கிறது. ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக டாஸ்மாக் கடைகளில் வேலை செய்து வரும் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

அனைத்து கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். பணியாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். ஏற்கனவே டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதாக துறை அமைச்சர் தெரிவித்ததை அரசாணையாக வெளியிட வேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி மாதம் 19-ந்தேதி சென்னையில் கோட்டை நோக்கி எங்களது சங்கம் சார்பில் ஊர்வலமாக சென்று முதல்-அமைச்சரை சந்திக்க உள்ளோம்.

தமிழகத்தில் மதுபான தயாரிப்பு ஆலைகள் அதிகரித்து விட்டது. டாஸ்மாக் கடைகளுக்கான மதுபான கொள்முதலில் வெளிப்படை தன்மை இல்லை. இதனால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது. போலி மதுபான ஆலைகள் மூலம் மதுபானங்கள் தயாரித்து பார்கள், பெட்டிக்கடைகளில் விற்கப்படுகிறது. கள்ளத்தனமாக மது விற்கப்படுவதை தடுக்க வேண்டும்.

டாஸ்மாக் கடைகளில் பெரும்பாலான விற்பனையாளர்கள் மதுபாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக வாங்குவதாக குற்றச்சாட்டை கூறுகின்றனர். இந்த கூடுதல் ரூபாயை டாஸ்மாக் கடை மின் கட்டணம், கடை செலவுகளுக்காக பயன்படுத்துகின்றனர். படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்பது எங்களது கோரிக்கையாகும். 1,000 கடைகள் மூடப்பட்டதில் 5 ஆயிரம் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு வேறு இடத்தில் முறையான பணி ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்