கர்நாடகத்தில் சோதனை அடிப்படையில் அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி குமாரசாமி அறிவிப்பு

கர்நாடகத்தில் ஆண்டுதோறும் கன்னட இலக்கிய மாநாடு நடந்து வருகிறது.

Update: 2019-01-04 23:15 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் ஆண்டுதோறும் கன்னட இலக்கிய மாநாடு நடந்து வருகிறது.

கன்னட இலக்கிய மாநாடு

இந்த நிலையில் 84-வது கன்னட இலக்கிய மாநாடு ஜனவரி 4-ந்தேதி (நேற்று) முதல் 6-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கும் என்று கன்னட இலக்கிய பேரவை தலைவர் சந்திரசேகர கம்பாரா அறிவித்தார். தார்வார் மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த மாநாடு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. கன்னட இலக்கிய மாநாடு நடத்துவதற்காக கர்நாடக மாநில அரசு ரூ.8 கோடி நிதி ஒதுக்கியது.

அதன்படி நேற்று காலை 8 மணி அளவில் தார்வாரில் கன்னட இலக்கிய மாநாடு தொடங்கியது. முன்னதாக கன்னட இலக்கிய மாநாட்டை தலைமை ஏற்று நடத்தும் கன்னட இலக்கிய பேரவை தலைவர் சந்திரசேகர் கம்பாரா ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

முதல்-மந்திரி குமாரசாமி

இதையடுத்து மாலையில் முதல்-மந்திரி குமாரசாமி தார்வாருக்கு சென்று கன்னட இலக்கிய மாநாட்டை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:-

ஒருங்கிணைந்த கர்நாடகம் உருவாக வேண்டும் என்ற குரல் எழுந்ததே இந்த தார்வாரில் தான். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சங்கர கவுடா பட்டீல் 21 நாட்கள் உண்ணாவிரதம் இருந்ததும் இந்த தார்வார் நகரில் தான். 4-வது முறையாக தார்வாரில் கன்னட இலக்கிய மாநாடு நடக்கிறது.

பெரிய நகைச்சுவை

ஞானபீட விருது பெற்ற சந்திரசேகர கம்பாரா, இ்ந்த மாநாட்டுக்கு தலைமை தாங்குவது பெருமைக்குரியது. அவர் 9 காவியங்கள், 25 நாடகங்கள், 9 புத்தகங்கள், 17 ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார். தனது சொந்த மாநிலத்தின் மண், மொழி, கலாசாரத்தை அதிகமாக நேசிப்பவர் அவர்.

எதிர்காலத்தில் கன்னட மொழிக்கு பாதிப்பு வந்து, இந்த மொழி அழிந்துவிடும் என்றெல்லாம் சொல்கிறார்கள், உங்கள் கருத்து என்ன? என்று கேள்வி கேட்கிறார்கள். அதற்கு சந்திரசேகர கம்பாரா, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எழுதி, பேசி வளர்ந்து வந்துள்ள கன்னட மொழி அழிந்துவிடும் என்று சொல்வது ஒரு பெரிய நகைச்சுவை ஆகும் என்று பதில் சொல்கிறார்.

தேசிய திட்டமாக...

நமது மாநிலத்தின் நிலம், நீர், மொழி, எல்லையை காக்க எங்கள் அரசு தயாராக உள்ளது. எந்த பாகுபாடும் பாா்க்காமல், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு எங்கள் அரசு பாடுபட்டு வருகிறது. அந்த நோக்கத்தின் அடிப்படையில் 9 அரசு துறைகளை வட கர்நாடகத்திற்கு இடம் மாற்ற மந்திரிசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கவும், நிலத்திற்கு பாசன வசதியை ஏற்படுத்தி தரவும் நடவடிக்கை எடுக்கப்படும். சமீபத்தில் நான் டெல்லி சென்றிருந்தபோது, பிரதமரை சந்தித்து பேசினேன். அப்போது கிருஷ்ணா மேல் அணை 3-வது கட்ட திட்டத்தை தேசிய திட்டமாக அறிவித்து நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்.

புதிய விமான நிலையங்கள்

அதே போல் மகதாயி நதிநீர் பிரச்சினை தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை அரசிதழில் வெளியிடுமாறும் கோரிக்கை விடுத்துள்ளேன். உப்பள்ளி விமான நிலையத்திற்கு சங்கொள்ளி ராயண்ணா பெயரும், பெலகாவி விமான நிலையத்திற்கு கித்தூர் ராணிசென்னம்மா பெயரும் சூட்ட வேண்டும் என்று மத்திய மந்திரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

கலபுரகி மற்றும் பீதர் விமான நிலையங்களை செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விஜயாப்புரா, கார்வாரில் புதிதாக விமான நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் இந்த பகுதிகளில் தொழில் வளர்ச்சி ஏற்படும்.

உயர் பல்நோக்கு மருத்துவமனை

விஜயாப்புராவில் உயர் பல்நோக்கு மருத்துவனை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறை கர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. 156 தாலுகாக்களில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்த வறட்சியை சரியான முறையில் எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வறட்சி பாதித்த பகுதிகளில் குடிநீர், கால்நடைகளுக்கு தீவனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மாதிரியில் விவசாய பணிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம்.

தொழிற்பேட்டைகள்

இந்த இஸ்ரேல் மாதிரி விவசாய திட்டம் சோதனை அடிப்படையில் 8 மாவட்டங்களில் அமல்படுத்தப்படும். இதில் வட கர்நாடகத்தில் 5 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வேலை வாய்ப்புகளை உருவாக்க 9 மாவட்டங்களில் தொழிற்பேட்டைகளை உருவாக்க முடிவு செய்துள்ளோம்.

அடுத்த 5 ஆண்டுகளில் 9 மாவட்டங்களில் 9 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். இதில் வடகர்நாடகத்தில் 4 மாவட்டங்கள் உள்ளது. அகண்ட கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக எங்கள் அரசு பாடுபட்டு வருகிறது.

ஆங்கில வழி கல்வி

கல்வித்துறைக்கு எங்கள் அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. அரசு பள்ளி-கல்லூரிகளை மேம்படுத்த ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகள் உயர்கல்வியை பெறும் நோக்கத்தில் அவர்களின் முழு கல்வி கட்டணத்தையும் அரசு ஏற்றுள்ளது.

அரசின் கோப்புகள் அனைத்தும் கன்னடத்திலேயே இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்குவது குறித்து விவாதம் நடந்து வருகிறது. இதுபற்றி பட்ஜெட்டில் அறிவித்தேன். இதற்கு சில காரணங்கள் உள்ளன.

ஏழை குழந்தைகளுக்கு நியாயம்...

பெரிய நிறுவனங்கள் அதிகளவில் வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. அங்கு வேலை பெற ஆங்கில மொழியை கற்பது மிக முக்கியமாக உள்ளது. சமீப காலமாக பெற்றோர் தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் அரசு பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கை குறைந்து வருகிறது.

ஏழை குழந்தைகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் சோதனை அடிப்படையில் தொடங்குகிறோம். இந்த விஷயத்தில் ஆலோசனைகளை நான் வரவேற்கிறேன்.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

இந்த விழாவில் மந்திரிகள் ஆர்.வி.தேஷ்பாண்டே, சிவள்ளி மற்றும் ஜெகதீஷ் ஷெட்டர், பிரகலாத் ஜோஷி எம்.பி. உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் அங்கு கர்நாடக மாநில கொடிையயும், தேசிய கொடியையும் குமாரசாமி ஏற்றி வைத்தார்.

இந்த மாநாட்டில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சி நடத்தினார்கள். இதில், கன்னட கலாசாரம், இலக்கியம், பாரம்பரியம் பற்றி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தார்வார் நகரில் கன்னட இலக்கிய மாநாடு நடந்ததால், நேற்றும், இன்றும் தார்வார் மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

கன்னட மொழி கட்டாயம்

இந்த மாநாட்டில் கன்னட இலக்கிய பேரவை தலைவர் சந்திரசேகர கம்பாரா பேசுகையில், ‘கன்னட மொழி, பண்பாடு, பாரம்பரியம் கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வருகிறது. இதனை காப்பாற்றுவது மாநில அரசின் கடமையாகும்.

கன்னட மொழியை அழியவிடாமல் காப்பாற்ற மாநில அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கன்னட மொழியை கட்டாயமாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

மேலும் செய்திகள்