விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்ற தொழில்அதிபரிடம் ரூ.50 ஆயிரம் ‘அபேஸ்’ தனியார் மருத்துவமனை ஊழியர்கள் மீது புகார்
விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்ற தொழில்அதிபரிடம் ரூ.50 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு,
விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்ற தொழில்அதிபரிடம் ரூ.50 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக தனியார் மருத்துவமனை ஊழியர்கள் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தொழில்அதிபர் படுகாயம்
பெங்களூரு பசவேசுவரா நகர் அருகே வசித்து வருபவர் லிங்கமூர்த்தி, தொழில்அதிபர். இவர், மஞ்சுநாத் நகர் மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக, லிங்கமூர்த்தியின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லிங்கமூர்த்தியின் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டதுடன், அவர் மயக்கம் அடைந்தார். உடனே அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு லிங்கமூர்த்திக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதையடுத்து, அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதுடன், சுயநினைவும் திரும்பியது.
இதற்கிடையில், லிங்கமூர்த்தி மோட்டார் சைக்கிளில் செல்லும் போது தொழில் விஷயமாக ஒரு பையில் ரூ.6 லட்சத்தை வைத்து எடுத்து சென்றிருந்தார். அவருக்கு சுயநினைவு திரும்பியதும் பணம் பற்றி கேட்டார். உடனே மருத்துவமனை ஊழியர்கள் பணப்பையை கொடுத்தனர். அந்த பையை தனது மகன் சந்தோசிடம் கொடுத்து ரூ.6 லட்சம் இருக்கிறதா? என்று பார்க்கும்படி லிங்கமூர்த்தி கூறினார். ஆனால் அந்த பையில் ரூ.5 லட்சம் மட்டுமே இருந்தது. ரூ.1 லட்சம் இல்லாததை கண்டு லிங்கமூர்த்தி, அவரது மகன் சந்தோஷ் அதிர்ச்சி அடைந்தனர்.
ரூ.50 ஆயிரம் ‘அபேஸ்’
இதுபற்றி மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டனர். ஆனால் அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்கள். பின்னர் லிங்கமூர்த்தி சிகிச்சை பெற்ற வார்டு அறையில் சந்தோஷ் தேடிப்பார்த்த போது, அங்கிருந்த பெட்டிக்குள் ரூ.50 ஆயிரம் இருந்ததை கண்டுபிடித்தார். ஆனால் மீதி ரூ.50 ஆயிரம் கிடைக்கவில்லை. இதனால் லிங்கமூர்த்தி சுயநினைவின்றி சிகிச்சை பெற்ற போது மருத்துவமனை ஊழியர்கள் ரூ.50 ஆயிரத்தை ‘அபேஸ்’ செய்திருக்கலாம் என்று சந்தோஷ் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
மேலும் நடந்த சம்பவங்கள் பற்றி பசவேசுவராநகர் போலீஸ் நிலையத்தில் மருத்துவமனை ஊழியர்கள் மீது சந்தோஷ் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.