வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகைகள் திருட்டு மர்மநபர்களுக்கு வலைவீச்சு

மயிலாடுதுறை அருகே வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகைகள் திருட்டுபோனது. இதுகுறித்து மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-01-04 22:45 GMT
குத்தாலம், 

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை கோழிகுத்தி மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது55). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டிவிட்டு கடலூரில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று இருந்தார். இரவு அவர் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த துணிகள் கீழே சிதறி கிடந்தன. மேலும், பீரோவின் லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 8 பவுன் நகைகள் திருட்டு போய் இருந்தது. இதுகுறித்து செல்வராஜ் குத்தாலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை மற்றும் குத்தாலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதி மக்கள், நேற்று முன்தினம் மாலை சந்தேகத்துக்குரிய வகையில் 2 மோட்டார் சைக்கிள்களில் 3 பேர் அந்த பகுதியில் திரிந்ததாக போலீசாரிடம் கூறினர். இதுகுறித்து குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் கதவை உடைத்து நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்