தரங்கம்பாடி பகுதியில் இறந்து கரை ஒதுங்கும் கடல் ஆமைகள் அழிந்து வரும் இனம் பாதுகாக்கப்படுமா?

தரங்கம்பாடி பகுதியில் கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்குகின்றன. அழிந்துவரும் ஆமை இனம் பாதுகாக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.;

Update: 2019-01-04 23:00 GMT
பொறையாறு, 

நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா பகுதியில் தரங்கம்பாடி, சந்திரபாடி, சின்னூர்பேட்டை, குட்டியாண்டியூர், பெருமாள்பேட்டை, புதுப்பேட்டை, வெள்ளக்கோவில், தாழம்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு ஆகிய கடற்கரை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் தற்போது கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி கிடக்கின்றன.

பொதுவாக கடல் ஆமைகள் ஆழ்கடல் பகுதியில் உயிர் வாழுகின்றன. ஆமைகள் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை முட்டையிடும் காலமாகும். இந்த மாதங்களில் முட்டையிட ஆமைகள் கடற்கரை வந்து குழி பறித்து முட்டையிட்டு, அதனை மூடிவிட்டு மீண்டும் கடலுக்கு சென்றுவிடும். அவ்வாறு முட்டையிட வரும் ஆமைகள் மீனவர்களின் படகுகளில் அடிபட்டு இறந்து கரை ஒதுங்குகிறது. ஆமைகளில் ஆலிவ்ரெட்லி, ஹாக்ஸ், லெதர்பேக், பச்சை என 225 வகைகள் உள்ளன. இதில் இந்திய கடல் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட ஆமை வகைகள் உயிர் வாழ கூடியதாகும்.

ஆமை முட்டையில் இருந்து 65 நாட்களில் ஆமை குஞ்சு வெளியேறி கடல் பகுதிக்கு செல்லும். அவ்வாறு செல்லும்போது கழுகு, கடற்பருந்து, நரி, உடும்பு, காகம் போன்றவைக்கு இரையாகி விடுகின்றன. சிலர் கடற்கரைகளுக்கு சென்று ஆமைகளின் வழிதடங்களை அறிந்து ஆமைகள் பொறிக்கும் முட்டைகளை உணவுக்காகவும், பேக்கரி உணவு பொருட்கள் தயாரிக்கவும் எடுத்து சென்று விடுகின்றனர். கடற்கரையில் மட்டுமல்லாமல் கடலிலும் திமிங்கலம், சுறா போன்ற பெரியவகை மீன்களுக்கு ஆமைகள் இரையாகி விடுகின்றன. எனவே, அழிந்துவரும் ஆமை இனம் பாதுகாக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்