காணும் பொங்கலை கொண்டாட களக்காடு தலையணைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு புலிகள் காப்பக துணை இயக்குனர் தகவல்
களக்காடு தலையணையில் காணும் பொங்கலை கொண்டாட சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் தெரிவித்தார்.
களக்காடு,
களக்காடு தலையணையில் காணும் பொங்கலை கொண்டாட சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் களக்காட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:-
களக்காடு தலையணை
களக்காடு தலையணையில் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. தலையணைக்கு காணும் பொங்கல் விழாவை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகள் நுழைவு கட்டணம் இல்லாமல் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. வனத்துறை விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். மது பாட்டில்கள், கத்தி, அரிவாள், தீப்பெட்டிகள் போன்ற ஆயுதங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடும் நடவடிக்கை
மேலும் களக்காடு தலையணை சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகளிடம் சோதனை நடத்தப்படும்.
தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகன நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதுபோல தலையணையில் சுற்றுலா பயணிகளுக்கு குளிப்பதற்கு குறிப்பிட்ட நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்படும். களக்காடு சரகத்தில் தலையணைக்கும், திருக்குறுங்குடி சரகத்தில் நம்பி கோவிலுக்கு மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கருங்கல்கசம், கோழிக்கால் போன்ற இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை.
எனவே தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு சென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.