தர்மபுரி, பொ.மல்லாபுரம், சூளகிரி பகுதிகளில் கடைகளில் பயன்படுத்திய 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

தர்மபுரி, பொ.மல்லாபுரம், சூளகிரி பகுதிகளில் கடைகளில் பயன்படுத்திய 3½ டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-01-04 23:00 GMT
பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட சேலம், தர்மபுரி மெயின் ரோடு, ராமமூர்த்தி நகர் சாலை, பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் செயல் அலுவலர் ஜலேந்திரன் தலைமையில் இளநிலை உதவியாளர் சந்தோஷ்குமார், அலுவலர் பழனி ஆகியோர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். அப்போது கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் 2 டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இந்த சோதனையின் போது இனிவரும் காலங்களில் கடைகள், வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இந்த சோதனையின் போது பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.

இதேபோன்று தர்மபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இலக்கியம்பட்டி, அதகபாடி, சோகத்தூர் ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட கிராமங்களில் உள்ள கடைகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கந்தப்பன், சுருளிநாதன், ரேவதி மற்றும் துப்புரவு பணியாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பல்வேறு கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தம்ளர்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். தர்மபுரி பகுதியில் மட்டும் 1 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆப்தா பேகம், ஜெபராஜ் சாமுவேல் ஆகியோர் தலைமையில், சூளகிரி-கிருஷ்ணகிரி சாலை, பேரிகை ரோடு, கீழ்த்தெரு, டேம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், டீ கடைகள், துணிக்கடை, காய்கறி கடைகளில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கடைகளில் பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஆய்வின்போது, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாசங்கர், அசினா பேகம், சுப்பிரமணி மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்