போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி போலீஸ் சூப்பிரண்டு, டி.ஐ.ஜி. அலுவலகங்களை வக்கீல்கள் முற்றுகை

போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, டி.ஐ.ஜி. அலுவலகங்களை வக்கீல்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-01-04 22:30 GMT
விழுப்புரம், 

சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருபவர் பேவல் (வயது 54). இவர் தன்னுடைய மனுதாரர்கள் சார்பில் கடந்த 2-ந் தேதி ஒரு வழக்கு சம்பந்தமாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு வழக்கு சம்பந்தமாக துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் எடுத்துரைத்து எதற்காக இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வக்கீல் பேவல் கேட்டுள்ளார்.

அப்போது ஏற்பட்ட வாய்த்தகராறில் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் சேர்ந்து வக்கீல் பேவலை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்தும், போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் நேற்று முன்தினம் விழுப்புரத்தில் வக்கீல்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

இந்நிலையில் நேற்றும் 2-வது நாளாக வக்கீல்கள் போராட்டம் நடத்தினர். காலை 10 மணியளவில் கோர்ட்டு பணிகளில் ஈடுபட வந்த போலீசாரை கோர்ட்டுக்குள் செல்ல அனுமதிக்காமல் நுழைவுவாயிலிலேயே அவர்களை வக்கீல்கள் தடுத்து நிறுத்தி வெளியே அனுப்பினர்.

அதனை தொடர்ந்து காலை 10.30 மணியளவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வக்கீல்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஐகோர்ட்டு வக்கீலை தாக்கிய போலீசார் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்.

அதன் பின்னர் தர்ணா போராட்டத்தை முடித்துக்கொண்ட வக்கீல்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வக்கீல்கள் அனைவரும் போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பியபடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர்.

உடனே அங்கிருந்த போலீசார் விரைந்து சென்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்குள் வக்கீல்கள் செல்லாதவாறு இருக்க ‘பேரிகார்டு’ மூலம் தடுத்து நிறுத்தினர். அதையும் மீறி வக்கீல்கள் உள்ளே செல்ல முயன்றதால் வேறு வழியின்றி போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நுழைவுவாயில் கதவுகளை இழுத்து மூடினர்.

இதையடுத்து வக்கீல்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது ஐகோர்ட்டு வக்கீலை தாக்கிய துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுவரை நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதையடுத்து வக்கீல் சங்க முக்கிய நிர்வாகிகள் சிலரை டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அதன்படி முக்கிய நிர்வாகிகள் சிலர், டி.ஐ.ஜி. அறைக்கு சென்றனர். அவர்களிடம் டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசி வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுப்பதாக டி.ஐ.ஜி. கூறினார்.

அதன் பிறகு பகல் 12.30 மணியளவில் வக்கீல்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுபற்றி வக்கீல்கள் கூறுகையில், சம்பந்தப்பட்ட 3 போலீசார் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்களது போராட்டம் தீவிரமாகும் என்றனர்.

போலீசாரை கண்டித்து கடந்த 2 நாட்களாக வக்கீல்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்