திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு? வேலூரில் செ.கு.தமிழரசன் பேட்டி

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு என்பது குறித்து விரைவில் அறிவிப்போம் என்று வேலூரில் செ.கு.தமிழரசன் கூறினார்.

Update: 2019-01-03 21:45 GMT
வேலூர்,

இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வேலூருக்கு வருகை தந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக சட்டசபையில் இந்தாண்டுக்கான முதல் கூட்டத்தொடரில் கவர்னரின் உரை ஏமாற்றம் அளிக்கிறது. கவர்னர் உரையில் மக்களுக்கான எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி செய்தபோது பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. மதசார்பற்ற கொள்கையில் அ.தி.மு.க. தெளிவாக இருந்தது. ஆனால் தற்போது அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகள் சரியில்லை. பா.ஜனதா உடனான அணுகுமுறையை அ.தி.மு.க. மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் கிடப்பில் உள்ளன. அதனை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். ‘கஜா’ புயல் நிவாரணத்துக்கு உரிய நிதியை மத்திய அரசு அளிக்கவில்லை. அதனை கேட்டு பெற வேண்டும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அய்யப்பன் கோவிலில் பெண்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும். பா.ஜனதா முத்தலாக் தடை சட்டத்துக்கு ஆதரவும், அய்யப்பன் கோவில் விவகாரத்தில் எதிர்ப்பும் தெரிவிக்கிறது. இதன் மூலம் பா.ஜனதா இரட்டை வேடம் போடுவது தெளிவாக தெரிகிறது.

தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்காமல், திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் அறிவித்திருப்பது ஏற்புடையது அல்ல. ஒட்டுமொத்தமாக 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க வேண்டும். திருவாரூர் தொகுதியில் எந்த கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து விரைவில் அறிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்