வீட்டுமனைக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அதிகாரி கைது
உடுமலையில் வீட்டுமனைக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
உடுமலை,
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள போடிபட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 63). இவருக்கு ஸ்ரீராம்நகரில் 4½ சென்ட் அளவு வீட்டுமனை உள்ளது. அந்த மனைக்கு உரிய அங்கீகாரம் இல்லை. இந்த நிலையில் அந்த வீட்டுமனையை கண்ணமநாயக்கனூர் சவுந்தர்யா கார்டனை சேர்ந்த ஜெகன்(49) என்பவர், விலைக்கு வாங்க நினைத்தார். பின்னர் காளிமுத்துவை அவர் தொடர்பு கொண்டபோது, தன்னுடைய இடம் அங்கீகாரம் இல்லாதது, ஊராட்சி ஒன்றியத்தில் அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டால் நிலத்தை அவருக்கு விற்பதாக காளிமுத்து கூறியுள்ளார்.
இதையடுத்து காளிமுத்துவிடம் சம்பந்தப்பட்ட வீட்டுமனை இடத்துக்கான ஆவணத்தை ஜெகன் பெற்றுக்கொண்டு கடந்த மாதம் 20-ந்தேதி உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்று உள்ளார். அங்கு பணியில் இருந்த வட்டார வளர்ச்சி அதிகாரி (கிராம ஊராட்சிகள்) எம்.ரமேஷ்குமாரை(49) சந்தித்து, ஆவணங்களை காண்பித்து அந்த இடத்துக்கு அங்கீகாரம் வழங்கும்படி கேட்டுள்ளார்.
அப்போது ரமேஷ்குமார், அந்த நிலத்துக்கு அபிவிருத்தி கட்டணமாக அரசுக்கு ரூ.10 ஆயிரத்து 118 செலுத்த வேண்டும் என்றும், மேலும் தனக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் தந்தால் மட்டுமே அங்கீகாரம் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்து தர முடியும் என்றும், அடுத்த முறை வரும் போது நில உரிமையாளரையும் அழைத்து வரும்படி ஜெகனிடம் கூறினார். இதைத்தொடர்ந்து ஜெகன், காளிமுத்துவை சந்தித்து வட்டார வளர்ச்சி அதிகாரி லஞ்சம் கேட்ட விவரத்தை கூறினார். பின்னர் காளிமுத்துவும், ஜெகனும் கடந்த 31-ந்தேதி மீண்டும் உடுமலைக்கு சென்று வட்டார வளர்ச்சி அதிகாரி ரமேஷ்குமாரை சந்தித்தனர்.
அதன்பிறகு ஜெகன், ரூ.20 ஆயிரம் அதிகமாக இருக்கிறது என்றும், அதை கொஞ்சம் குறைத்து கொள்ளுமாறும் ரமேஷ்குமாரிடம் கேட்டுள்ளார். பின்னர் ரூ.15 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் வீட்டுமனைக்கான அங்கீகாரத்தை வழங்குவதாக ரமேஷ்குமார் கூறினார். ஆனால் லஞ்சம் கொடுத்து வீட்டுமனைக்கு அங்கீகாரம் பெற விரும்பாத ஜெகன் இதுகுறித்து திருப்பூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். புகாரை பெற்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனப்பொடி தடவிய ரூ.15 ஆயிரத்துக்கான நோட்டுகளை ஜெகனிடம் கொடுத்து அனுப்பினார்கள்.
இந்தநிலையில் நேற்று திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கவுசல்யா, எழிலரசு மற்றும் போலீசார் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே மறைந்து நின்று கண்காணித்தனர். அப்போது ஜெகன், ரசாயனபொடி தடவிய ரூ.15 ஆயிரத்தை லஞ்சமாக ரமேஷ்குமாரிடம் கொடுத்தார்.
அவர் பணத்தை வாங்கிய போது அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ரமேஷ்குமாரை கையும், களவுமாக பிடித்தனர். அவரிடம் இருந்து 15 ஆயிரம் லஞ்சப்பணத்தையும் மீட்டனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் அலுவலகத்தில் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத மேலும் ரூ.14 ஆயிரத்து 500 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அலுவலக கதவுகளை உள்புறமாக பூட்டி அதிகாரிகள், ரமேஷ்குமாரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு ரமேஷ்குமாரை கைது செய்து உடுமலை சவுதாமலர் லே-அவுட்டில் உள்ள அவருடைய வீட்டுக்கு அழைத்து சென்று லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினார்கள். சம்பந்தப்பட்ட காளிமுத்துவின் வீட்டுமனை தொடர்பான ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் உடுமலையில் நேற்று பெரும்பரபரப்பு ஏற்பட்டது.