அம்மாபேட்டை அருகே உள்ள கேரள கவர்னர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

அம்மாபேட்டை அருகே உள்ள கேரள கவர்னர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் அவருடைய வீட்டை முற்றுகையிட சென்ற 5 பேர் ஈரோட்டில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-01-03 22:30 GMT
அம்மாபேட்டை, 

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர். இதனால் சபரிமலைக்கு சென்ற பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

நேற்று முன்தினம் 2 பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் அதிரடியாக சபரிமலைக்கு சென்று அய்யப்பனை தரிசனம் செய்தனர். அவர்கள் 18-ம் படி வழியாக செல்லாமல் கோவிலின் பின்பகுதி வழியாக உள்ளே சென்று சாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து அய்யப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று அங்கு முழுஅடைப்பு போராட்டமும் நடந்தது.

இந்தநிலையில் கேரள அரசை கண்டித்து ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே காடப்பநல்லூரில் உள்ள கேரள கவர்னர் சதாசிவம் வீட்டை நேற்று இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் முற்றுகையிடப்போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து அரவது வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தினமும் அங்கு 6 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமையில் 5 பேர், அம்மாபேட்டை அருகே காடப்பநல்லூரில் உள்ள கவர்னர் சதாசிவத்தின் வீட்டை முற்றுகையிடுவதற்காக ஈரோட்டில் இருந்து புறப்பட தயாரானார்கள்.

முன்னதாக அவர்கள் ஈரோடு காவிரிக்கரை பகுதியில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள் கவர்னர் வீட்டை முற்றுகையிட புறப்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து, அங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு அருகில் உள்ள கேரள சமாஜம் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதேபோல் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் நடத்தி வரும் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் உள்ள பகுதிகளில் போலீசார் ரோந்து வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்