வெடிகுண்டு வீசிய வழக்கில் ரவுடி வசூர்ராஜாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி
ரவுடி மீது வெடிகுண்டு வீசிய வழக்கில், ரவுடி வசூர்ராஜாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு ஒருநாள் அனுமதி வழங்கியது.
வேலூர்,
வேலூர் சத்துவாச்சாரி மடத்தெருவைச் சேர்ந்தவர் தினேஷ் என்கிற வீச்சு தினேஷ் (வயது 35). இவர் மீது கொலை, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி வீச்சு தினேஷ் மற்றும் அவருடைய கூட்டாளிகள் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டியதாக சத்துவாச்சாரி போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
அதைத்தொடர்ந்து அக்டோபர் மாதம் 10-ந்தேதி வீச்சு தினேஷ் ஜாமீனில் வெளியே வந்தார். அவரை, கூட்டாளிகள் காரில் அழைத்து வந்தனர். பின் தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் காரை சுற்றி வளைத்து வெடிகுண்டுகளை வீசினர். அதில் ஒரு வெடிகுண்டு பயங்கரச் சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. ஆனால் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
இதுகுறித்த புகாரின்பேரில் பாகாயம் போலீசார், ரவுடி வசூர்ராஜா மற்றும் அவருடைய கூட்டாளிகளை சந்தேகித்தனர். ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள வசூர்ராஜா திட்டம் போட்டு, தனது கூட்டாளிகளை ஏவி, வீச்சு தினேஷை கொலை செய்ய முயன்றது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவருடைய கூட்டாளிகள் பலரை போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் உள்ள ஒரு வழக்குத் தொடர்பாக திருச்சி ஜெயிலில் உள்ள வசூர்ராஜாவை போலீசார் வேலூர் மாஜிஸ்திரேட்டு எண் -1 கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர். அந்த வழக்கு வருகிற 18-ந் தேதிக்கு ஒத்திவைத்து மாஜிஸ்திரேட்டு அலிஷியா உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து வீச்சு தினேஷ் மீது வெடிகுண்டு வீசிய வழக்கில் பாகாயம் போலீசார், வசூர்ராஜாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என்று, அதே கோர்ட்டில் அனுமதி கேட்டிருந்தனர். அதன்படி வசூர்ராஜாவிடம் விசாரணை மேற்கொள்ள மாஜிஸ்திரேட்டு போலீசாருக்கு ஒருநாள் அனுமதி வழங்கினார். அதைத்தொடர்ந்து அவரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.