குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம்
திட்டக்குடி அருகே குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திட்டக்குடி,
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள வையங்குடி கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் அதே பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றின் நீர்மட்டம் குறைந்ததாலும், ஆழ்துளை கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற பயன்படுத்தப்படும் மின் மோட்டார் பழுதானதாலும் கடந்த சில மாதங்களாக இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக அப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் அருகில் உள்ள விளை நிலங்களுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் சென்று தண்ணீர் பிடித்து வரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், வெலிங்டன் ஏரி பாசன சிறு, குறு விவசாயிகள் சங்க தலைவர் தயா.பேரின்பன் தலைமையில் காலி குடங்களுடன், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முன்பு திரண்டனர். தொடர்ந்து அவர்கள் முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கிராம மக்களில் சிலர், திடீரென மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த நல்லூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, முறையாக குடிநீர் வினியோகம் செய்வது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து மாற்று நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். இதையேற்ற கிராம மக்களும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி நின்றவர்களும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.