சேலம் செவ்வாய்பேட்டையில் சாலையை சீரமைக்ககோரி மரக்கன்று நடும் போராட்டம் அதிகாரிகளுடன் மனிதநேய மக்கள் கட்சியினர் வாக்குவாதம்
சேலம் செவ்வாய்பேட்டையில் சாலையை சீரமைக்ககோரி மரக்கன்றுகள் நடும் போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சேலம் மாநகராட்சி 30-வது வார்டுக்கு உட்பட்ட செவ்வாய்பேட்டை மஜித் தெரு, அப்புசெட்டி தெரு, அக்கிராமன் தெரு, சாய்பாபா தெரு, பங்களா தெரு உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக சாலைகள் சீரமைக்காமல் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், செவ்வாய்பேட்டை மஜித் தெருவில் வசிக்கும் பொதுமக்களும், மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்தவர்களும் நேற்று காலை பழுதடைந்த சாலையை சீரமைக்ககோரி அப்பகுதியில் திரண்டு வந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், பழுதடைந்த சாலையில் மரக்கன்றுகளை நட்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த போலீஸ் உதவி கமிஷனர் ஈஸ்வரன், செவ்வாய்பேட்டை இன்ஸ்பெக்டர் பால்பாண்டி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சாலையை உடனடியாக சீரமைப்பு செய்வதாக மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அஸ்தம்பட்டி மண்டல இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் உடனடியாக அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மஜித்தெரு மட்டுமின்றி செவ்வாய்பேட்டை பகுதிகளில் பழுதடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் எனக்கூறி அதிகாரிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடும் வாக்குவாதம் செய்தனர்.
அப்போது, பாதாள சாக்கடை பணிகளால் சாலை சீரமைப்பு தாமதம் ஆவதாகவும், இருப்பினும் வருகிற 21-ந் தேதி சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு மனித நேய மக்கள் கட்சியினர், சாலையை சீரமைப்பது பற்றி எழுத்து பூர்வமாக எழுதி கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
பின்னர், கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு பொதுமக்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.