நடிக்க வைப்பதாக கூறி இளம்பெண்ணை கற்பழித்த சினிமா இயக்குனருக்கு ஆயுள் தண்டனை செசன்ஸ் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

நடிக்க வைப்பதாக கூறி இளம்பெண்ணை கற்பழித்த சினிமா இயக்குனருக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை செசன்ஸ் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்து உள்ளது.

Update: 2019-01-03 23:00 GMT
மும்பை,

நடிக்க வைப்பதாக கூறி இளம்பெண்ணை கற்பழித்த சினிமா இயக்குனருக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை செசன்ஸ் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்து உள்ளது.

கற்பழிப்பு

சினிமாவில் நடிக்க ஆட்களை தேர்வு செய்யும் கேஸ்ட்டிங் இயக்குனராக பணியாற்றி வந்தவர் ரவீந்திரநாத் கோஸ். இவருக்கு கடந்த 2011-ம் ஆண்டு மும்பை ஆஸ்பத்திரி ஒன்றில் பணியாற்றி வந்த 23 வயது இளம்பெண் ஒருவருடன் அறிமுகம் உண்டானது. திருமணமான அந்த பெண் சினிமாவில் நடிக்க விருப்பம் தெரிவித்தார். இதை அறிந்து கொண்ட ரவீந்திரநாத் கோஸ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.

இதற்காக தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என கூறிய அவர், 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மலாடு மத் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் வைத்து அந்த பெண்ணை கற்பழித்தார். மேலும் அந்த பெண்ணை ஆபாசமாக செல்போனில் படம் பிடித்தார்.

அந்த படங்களை காண்பித்து, தான் அழைக்கும் போதெல்லாம் உல்லாசத்திற்கு வர வேண்டும். இல்லையெனில் அந்த படங்களை கணவருக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டி தொடர்ந்து கற்பழித்து வந்தார்.

இதனால் பயந்து போன இளம்பெண் அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக நாசிக் சென்று விட்டார்.

பணம் கேட்டு மிரட்டல்

அந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரசவத்துக்காக மும்பை வந்த இளம்பெண்ணை ரவீந்திரநாத் கோஸ் சந்தித்தார். அப்போது அவர் ஆபாச புகைப்படங்களை வெளியிடாமல் இருப்பதற்காக ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டினார். அதற்கு இளம்பெண் பிரசவம் ஆன பின்னர் பணம் தருவதாக தெரிவித்தார்.

இதனால் கோபம் அடைந்த அவர், இளம்பெண்ணின் ஆபாச புகைப்படங்களை அவரது கணவரின் செல்போனுக்கு அனுப்பி வைத்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் மனைவியை பிரிந்து சென்றார்.

ஆயுள் தண்டனை

இதனால் விரக்தி அடைந்த அந்த பெண் ரவீந்திரநாத் கோஸ் மீது போலீசில் கற்பழிப்பு புகார் அளித்தார். அதன்பேரில் ரவீந்திரநாத் கோசை கைது செய்த போலீசார் அவர் மீது மும்பை செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை நிறைவில், அவர் மீதான கற்பழிப்பு மற்றும் பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகள் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து தீர்ப்பு கூறிய செசன்ஸ் கோர்ட்டு, ரவீந்திரநாத் கோசுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சத்து 31 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணமாக அவர் ரூ.1 லட்சம் கொடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

சினிமா பிரபலங்கள் மீது நடிகைகள் மீ டூ புகார் தெரிவித்து வந்த நிலையில், பாலியல் வழக்கில் சினிமா துறையை சேர்ந்த ஒருவருக்கு ஆயுள் தண்டனை கிடைத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்