விக்ரோலி ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் குதித்து மகளுடன் தற்கொலைக்கு முயன்ற பெண் வீடியோ வெளியாகி பரபரப்பு
விக்ரோலி ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் குதித்து மகளுடன் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மும்பை,
விக்ரோலி ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் குதித்து மகளுடன் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மகளுடன் குதித்த பெண்
மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள விக்ரோலி ரெயில் நிலையத்திற்கு பெண் ஒருவர் தனது 6 வயது மகளுடன் வந்தார். 1-ம் எண் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த போது, அங்குள்ள தண்டவாளத்தில் மின்சார ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.
இதைப்பார்த்த அந்த பெண் திடீரென தனது மகளின் கையை பிடித்து இழுத்து கொண்டு தண்டவாளத்தில் குதித்தார். ரெயில் வருவதை பார்த்ததும் சிறுமி கதறினாள்.
தண்டவாளத்தில் இருந்து விலகி ஓட முயற்சி செய்தாள். இருப்பினும் அந்த பெண் தனது மகளை விடவில்லை.
போலீஸ் விசாரணை
பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் செய்வதறியாது கூச்சல் போட்டனர். இந்த நிலையில், மின்சார ரெயில் மோட்டார்மேன் துரிதமாக செயல்பட்டு சற்று தூரத்திலேயே ரெயிலை நிறுத்தினார். இதன் காரணமாக தாய், மகள் இருவரும் உயிர் தப்பினார்கள்.
உடனடியாக பிளாட்பாரத்தில் இருந்த பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி தாய், மகள் இருவரையும் மீட்டனர். தகவல் அறிந்து வந்த ரெயில்வே போலீசார் அந்த பெண்ணை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
தனது நடத்தையில் கணவர் சந்தேகம் அடைந்ததால் மகளுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக அந்த பெண் போலீசாரிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில், அந்த பெண் மகளுடன் தற்கொலைக்கு முயன்றது ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ காட்சி நேற்று செய்தி சேனல்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.