சிவராஜ்குமார், புனித்ராஜ்குமார், சுதீப் உள்பட நடிகா்கள் வீடுகளில் வருமானவரி சோதனை 25 இடங்களில் 200 அதிகாரிகள் நடத்தினர்
சிவராஜ்குமார், புனித்ராஜ்குமார், சுதீப் உள்பட முன்னணி நடிகர்கள், தயாரிப் பாளர்கள் வீடு, அலுவலகங்கள் என 25 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
பெங்களூரு,
கர்நாடக திரையுலகில் மிகப்பெரிய பட்ஜெட்டில் அதாவது ரூ.80 கோடி செலவில் ‘கே.ஜி.எப்.’ படம் உருவாக்கப்பட்டது.
ரூ.150 கோடி வசூல்
அந்த படம் கன்னடம், தமிழ், தெலுங்கு உள்பட 5 மொழிகளில் வெளியிடப்பட்டது. இந்த படம் வெளியான 10 நாட்களில் ரூ.150 கோடியை வசூலித்து சாதனை படைத்தது.
இந்த படம் தான், கன்னட திரையுலக வரலாற்றில் இவ்வளவு பெரிய தொகையை வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்த படத்தின் வெற்றி மற்றும் வசூல் குறித்து ஊடகங்களில் பெரிய அளவுக்கு பேசப்பட்டது. அதே போல் சிவராஜ்குமார், சுதீப் நடித்த வில்லன் படமும் பெரிய அளவில் வசூலில் சாதனை படைத்தது.
சிவராஜ்குமார்-புனித்ராஜ்குமார்
இந்த நிைலயில் நேற்று காலை வருமான வரித்துறையை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று, முன்னணி நடிகர் களான சிவராஜ்குமார், புனித்ராஜ்குமார், சுதீப், யஷ் மற்றும் தயாரிப்பாளர்கள் நடிகர் ரஜினிகாந்த் நடித்த லிங்கா பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், ஜெயண்ணா, கே.ஜி.எப். பட தயாரிப்பாளர் விஜய்கிரகந்தூர், சி.ஆர்.மனோகர் எம்.எல்.சி. ஆகிய 8 பேரின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.
பெங்களூரு ஹெப்பால் வெளிப்புற சாலைக்கு அருகே உள்ள நடிகர் சிவராஜ்குமார் வீட்டிலும், சதாசிவநகரில் உள்ள புனித் ராஜ்குமார் வீட்டிலும், கத்திரிகுப்பேயில் உள்ள நடிகர் யஷ் வீட்டிலும், ஜே.பி.நகரில் உள்ள நடிகர் சுதீப் வீட்டிலும், மகாலட்சுமி லே-அவுட் நாகபுராவில் உள்ள தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் வீட்டிலும், நாகரபாவியில் உள்ள தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர் களின் அலுவலகங்கள், உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என மொத்தம் 25 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. ஒரே ேநரத்தில் இந்த சோதனை நடைபெற்றது. நடிகர் சுதீப், தமிழில் வெளியான ‘நான் ஈ’ படத்தில் நடித்து பிரபலமானவர்.
அதிர்ச்சி அடைந்தனர்
நேற்று காலை 7 மணிக்கு இந்த அதிகாரிகள் வாடகை கார்களில் வந்தனர். சோதனைக்கு வந்தபோது, தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்று அறிமுகம் செய்து கொண்டு, உள்ளே சென்றனர். சென்னை, ஐதராபாத் ஆகிய நகரங்களில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனைக்காக வந்தனர் என்று சொல்லப்படுகிறது.
வருமான வரித்துறை அதிகாரிகள் வந்திருப்பதை கண்டு, நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையின் போது சொத்து ஆவணங்கள், தங்க நகைகளை ஆய்வு செய்தனர். சிவராஜ் குமார், யஷ், புனித் ராஜ் குமார் ஆகியோரின் வீடுகளில் அதிகளவில் தங்க நகைகள் இருந்ததாகவும். அதை அதிகாரிகள் கணக்கெடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் நகை மதிப்பீட்டாளர்கள் வந்து, நடிகர்கள், தயாரிப்பாளர்கள் வீடுகளில் சிக்கிய தங்க நகைகளை மதிப்பீடு செய்தனர்.
நடிகர் யஷ்
சோதனை நடத்தியபோது, வீட்டில் இருந்தவர்களிடம் சொத்து விவரங்கள் குறித்து தகவல்களை அதிகாரிகள் கேட்டு பெற்றனர். நடிகர் யஷ்சின் மனைவியின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
நடிகர் யஷ் வீட்டில் இருந்த அவரது தாய், தந்தை ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் அவரது சகோதரி, உறவினர் வீடு மற்றும் மனைவி வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
படப்பிடிப்பு ரத்து
இந்த சோதனையின்போது, யஷ் வீட்டில் இல்லை. அதே போல் சுதீப் மைசூருவில் படப்பிடிப்பில் இருந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சுதீப், படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு பெங்களூருவுக்கு திரும்பினார். அதே போல் யஷ்சும் மும்பையில் இருந்து பெங்களூருவுக்கு விமானம் மூலம் திரும்பி வந்தார்.
இந்த சோதனையில் கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் மற்றும் தங்க நகைகளை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வருமான வரி சோதனை, காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. அதாவது 11 மணி நேரம் தொடர்ச்சியாக சோதனை நடந்தது. கர்நாடக திரையுலக வரலாற்றில் இப்படி பெரிய அளவில் வருமானவரித் துறை சோதனை நடப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் கன்னட திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது.