ஏற்காட்டில் சாலையோர கடைகள் மூடல்

ஏற்காட்டில் சாலையோர கடைகள் மூடப்பட்டன. இன்று முதல் மாற்று இடத்தில் கடைகளை அமைத்து கொள்ள ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

Update: 2019-01-03 22:00 GMT
ஏற்காடு, 

சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் குறிப்பிடத்தக்கது ஏற்காடு மலை வாசஸ்தலமாகும். இங்கு படகு இல்லம், அண்ணா பூங்கா, பக்கோடா பாயிண்ட், கிளியூர் அருவி உள்பட பல்வேறு இடங்கள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ளன.

ஏற்காட்டில், படகு இல்ல சாலை, ஒண்டிக்கடை சாலை மற்றும் அண்ணா பூங்கா பகுதிகளில் சாலையோரங்களில் பலர் கடைகள் அமைத்து பழங்கள் உள்ளிட்ட பல்வேறு உணவு பண்டங்களை விற்பனை செய்து வந்தனர். இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததாக சுற்றுலா பயணிகள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து படகு இல்ல சாலை, ஒண்டிக்கடை சாலை மற்றும் அண்ணா பூங்கா பகுதிகளில் சாலையோர தற்காலிக கடைகள் வைத்து வியாபாரம் செய்ய ஏற்காடு ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் அதிரடியாக தடை விதித்து கடந்த 31-ந் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

படகு இல்ல சாலை, ஒண்டிக்கடை சாலை மற்றும் அண்ணா பூங்கா பகுதிகளில் கடைகள் வைத்துள்ளதால், சுற்றுலா பயணிகள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதுடன், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் இடையூறாக உள்ளது. எனவே இந்த பகுதிகளில் தற்காலிக கடைகள் வைத்துள்ளவர்களுக்கு மாற்று இடமாக கோடை விழா நடைபெறும் மைதான திடலில் கடைகள் வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனவே தற்காலிக கடை வியாபாரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் கோடை விழா மைதானத்தில் கடைகள் வைத்து கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. அவ்வாறு இல்லாமல் ஒன்றிய நிர்வாகத்தின் உத்தரவை மீறி படகு இல்ல சாலை, ஒண்டிக்கடை சாலை மற்றும் அண்ணா பூங்கா பகுதிகளில் தொடர்ந்து சாலையோர கடைகள் வைத்திருந்தால் நாளை(சனிக்கிழமை) முதல் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் அந்த கடைகளை அப்புறப்படுத்தும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு எதிரொலியாக, நேற்று இந்த பகுதிகளில் உள்ள சாலையோர கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. மேலும் இன்று முதல் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் ஒதுக்கிய இடத்தில் கடைகளை வைத்துக்கொள்ள சாலையோரங்களில் கடை வைத்திருந்தவர்கள் முடிவு செய்துள்ளனர். இதன்மூலம் ஏற்காட்டில் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்