லஞ்ச வழக்கில் கைதான வனக்காப்பாளர் பணி இடைநீக்கம்

லஞ்ச வழக்கில் கைதான திருமனூர் வனக்காப்பாளர் சுப்பிரமணியை பணி இடைநீக்கம் செய்து நாமக்கல் மாவட்ட வன அலுவலர் காஞ்சனா உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2019-01-03 21:45 GMT
நாமக்கல், 

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள தும்பல்பட்டியை சேர்ந்தவர் மலையன். இவரது வளர்ப்பு நாய் மூங்கில்மலை பகுதியில் இருந்து கடந்த வாரம் உடும்பு ஒன்றை பிடித்து வந்தது. இதை மலையன் சமைத்து வைத்து இருந்தார்.

இதற்கிடையே இதுகுறித்து தகவல் அறிந்த ராசிபுரம் வனசரகத்துக்கு உட்பட்ட திருமனூர் வனக்காப்பாளர் சுப்பிரமணி, மலையன் வீட்டுக்கு சென்று உடும்பை சமைத்து வைத்த குற்றத்திற்காக வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தில் கீழ் கைது செய்வதாக மிரட்டி உள்ளார்.

மேலும் கைது செய்யாமல் இருக்க உடனடியாக ரூ.2,500 லஞ்சம் தர வேண்டும் என கேட்டு உள்ளார். லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத மலையன் இதுகுறித்து சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில் தும்பல்பட்டிக்கு கடந்த 28-ந் தேதி வந்த வனக்காப்பாளர் சுப்பிரமணியிடம், மலையன் ரசாயனம் தடவிய ரூ.2,500-ஐ கொடுத்தார். அதை அவர் வாங்கியபோது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சுப்பிரமணியை கைது செய்தனர். பின்னர் அவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, கைதான சுப்பிரமணி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க போலீசார் வனத்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தனர். அவர்களின் பரிந்துரையை ஏற்று நாமக்கல் மாவட்ட வன அலுவலர் காஞ்சனா, லஞ்ச வழக்கில் கைதான சுப்பிரமணியை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார். இதற்கான நகலை சுப்பிரமணியிடம் வனத்துறையினர் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்