சென்னையில் கேரள அரசின் ஓட்டல் மீது இந்து முன்னணியினர் தாக்குதல் 6 பேர் கைது

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று பெண்கள் சாமி கும்பிட்ட விவகாரத்தை கண்டிக்கும் வகையில், சென்னையில் உள்ள கேரள அரசின் ஓட்டல் மீது இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்தினார்கள். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-01-03 22:45 GMT
சென்னை,

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று பெண்கள் இருவர் சாமி கும்பிட்டதை கண்டிக்கும் வகையில் பா.ஜ.க.வினரும், இந்து முன்னணியினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சென்னையில் உள்ள கேரள அரசுக்கு சொந்தமான சுற்றுலா ஓட்டல் மீது இந்து முன்னணி அமைப்பினர் நேற்று முன்தினம் இரவு தாக்குதலில் ஈடுபட்டனர்.

அந்த ஓட்டல் ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஆட்டோவில் வந்த 6 பேர் திடீரென அந்த ஓட்டல் மீது சரமாரியாக கற்களை வீசினார்கள். உருட்டுக்கட்டையாலும் தாக்கினார்கள். இதில் ஓட்டலின் வரவேற்பறையின் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது.

ஓட்டலின் ஜன்னல் கண்ணாடிகளும் சேதம் அடைந்தன. இதுபற்றி தகவல் கிடைத்ததும் நுங்கம்பாக்கம் உதவி போலீஸ் கமிஷனர் முத்துவேல்பாண்டி தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். குறிப்பிட்ட ஓட்டலுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக ஆயிரம்விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தாக்குதலில் ஈடுபட்டதாக இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த பார்த்தசாரதி (வயது 43), புளியந்தோப்பு சிவவிஜயன் (30), டி.பி.சத்திரத்தை சேர்ந்த சதீஷ் (35), கிருஷ்ணன் (40), தியாகராயநகரை சேர்ந்த சத்தியநாதன் (32) உள்ளிட்ட 6 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். பார்த்தசாரதி இந்து முன்னணி அமைப்பின் ஆயிரம்விளக்கு பகுதி பொறுப்பாளர் ஆவார்.

மேலும் செய்திகள்