கோவில்பட்டியில் 2-வது நாளாக வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
கோவில்பட்டியில் 2-வது நாளாக வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் 2-வது நாளாக வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2-வது நாளாக கடையடைப்பு
தமிழகத்தில் பிளாஸ்டிக் மீதான தடை கடந்த 1-ந்தேதியில் இருந்து அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள கடைகளில் நேற்று முன்தினம் நகரசபை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 42 கடைகளில் இருந்த 100 கிலோ பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 2-வது நாளாக கோவில்பட்டியில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. கோவில்பட்டி மெயின் ரோடு, மாதாங்கோவில் ரோடு, தெற்கு பஜார், மார்க்கெட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகள், நகை கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. நகரசபை தினசரி மார்க்கெட்டில் உள்ள சுமார் 500 கடைகளும் மூடிக்கிடந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
உதவி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
இதற்கிடையே, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், வடக்கு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், பொருளாளர் பாஸ்கர், மாநில நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேசுவரன் உள்பட திரளான வியாபாரிகள் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சூரியகலாவிடம் கோரிக்கை மனு வழங்கி விட்டு, கலைந்து சென்றனர்.
இதுகுறித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், கடைக்காரர்களுக்கு துண்டுபிரசுரம் வழங்கி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் இதுதொடர்பாக நகரில் 3 இடங்களில் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் நகரசபை நிர்வாகம் சார்பில், கடைக்காரர்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படவில்லை. எனவே கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று அதிகாரிகள் அறிவுரை வழங்க வேண்டும். கடைகளில் உரிமையாளர் இல்லாத நேரத்தில் அத்துமீறி நுழைந்து, பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த நகரசபை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வரையிலும் கடைகளை திறக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.