10 கி.மீ.தூர மலைப்பாதையில் நடந்து சென்று அலக்கட்டு கிராம மக்களிடம் குறைகளை கேட்ட கலெக்டர் 1 ஏக்கர் நிலம், சொந்தவீடு வழங்க பரிசீலனை

10 கி.மீ.தூர மலைப்பாதையில் நடந்து சென்று அலக்கட்டு கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்த கலெக்டர் மலர்விழி, அந்த கிராமத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கு 1 ஏக்கர் நிலம், சொந்தவீடு வழங்கும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்தார்.

Update: 2019-01-03 23:00 GMT
பாப்பாரப்பட்டி,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா வட்டுவனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அலக்கட்டு மலைகிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் சீங்காடு மலை அடிவாரத்திலிருந்து செங்குத்தான மலைப்பாதையின் உச்சி பகுதியில் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 25 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். இங்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்று அக்கிராம மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி நேற்று அலக்கட்டு மலை கிராமத்திற்கு சீங்காடு அடிவார பகுதியிலிருந்து கரடுமுரடான மலைப்பாதை வழியாக நடந்து சென்றார். சுமார் 10 கி.மீ. தூரம் கொண்ட இந்த மலைப்பாதையில் நடந்து சென்றார். பின்னர் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை பார்வையிட்டு மாணவ-மாணவிகளிடம் கற்றல் திறன் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கிராம மக்களிடம் கலெக்டர் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது கலெக்டர் பேசுகையில், இந்த மலைகிராமத்தை சேர்ந்த குழந்தைகள் கல்வி கற்க அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. எனவே அனைவரும் தங்கள் குழந்தைகளை கட்டாயம் படிக்கவைக்க வேண்டும். இந்த கிராம மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்க மாவட்ட நிர்வாகம் விரைவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இங்கு வாழும் மக்களுக்கு மலைக்கு கீழ் பகுதியில் சமதள பரப்பில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1 ஏக்கர் நிலம் வழங்கவும், சொந்த வீடு கட்டிக்கொடுக்கவும், மலைகிராம மக்களின் வாழ்வாதாரத்திற்காக கறவை மாடுகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தவும், மாவட்ட நிர்வாகம் பரிசீலனை செய்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் ஒப்புதல் அளித்தால் இந்த திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் என்று கலெக்டர் மலர்விழி பேசினார்.

இதையடுத்து அலக்கட்டு மலைகிராம மக்கள் அனைவரும் அந்த திட்டத்தில் பயன்பெற ஒப்புதல் தெரிவித்தனர். உடனடியாக கையொப்பம் இட்டு ஒப்புதல் கடிதத்தை கலெக்டரிடம் வழங்கினார்கள். இந்த ஆய்வின்போது பென்னாகரம் வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், கிருஷ்ணன், மண்டல துணை தாசில்தார் பிரபு, வனசரகர் செல்வம் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்