பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு நடத்தினால் கடும் நடவடிக்கை கலெக்டர் பிரபாகர் எச்சரிக்கை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் எச்சரித்துள்ளார்.

Update: 2019-01-03 21:45 GMT
கிருஷ்ணகிரி, 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் எருது விடும் விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகங்களில் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் காவல் துறை, வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மருத்துவ துறை, ஊரக வளர்ச்சி, மின்சார வாரியம், வட்டார போக்குவரத்து துறை, இந்து சமய அறநிலைய துறை மற்றும் தீயணைப்பு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் எருது விடும் விழா நடத்த உள்ள ஊர் பொதுமக்கள், ஜல்லிக்கட்டு பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.

ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் 2009-ன்படி கலெக்டரிடம் அனுமதி பெற்ற பின்னரே நடத்த எருது விடும் விழா நடத்த வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் எருதுவிடும் விழா ஆகிய நிகழ்ச்சிகளை அரசிதழில் அறிவிக்கப்பட்ட கிராமங்களைத் தவிர வேறெந்த கிராமங்களிலும் நடத்த கூடாது.

காவல் துறை, வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மருத்துவத்துறை, ஊரக வளர்ச்சி, மின்சாரவாரியம், மருத்துவத்துறை, ஊராட்சிகள், மின்சாரவாரியம், வட்டார போக்குவரத்துத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய துறைகளின் அலுவலர்கள் விழா நடைபெறும் இடத்தை பார்வையிட்டு பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் எந்த பாதிப்புமின்றி உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து பரிந்துரை செய்யும் பட்சத்தில் விழா நடத்த அனுமதி வழங்கப்படும்.

சட்டத்திற்கு புறம்பாக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் இத்தகைய விழாக்கள் நடத்த ஏற்பாடு செய்யும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே அனுமதி பெறாமல் எருது விடும் விழா நடத்த ஏற்பாடு செய்யும் நபர்கள் மீது காவல் துறை மூலம் உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்