பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி நகராட்சி அலுவலகத்தை பணியாளர்கள் முற்றுகை
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி நகராட்சி அலுவலகத்தை பணியாளர்கள் முற்றுகையிட்டனர்.
ஊட்டி,
ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு துப்புரவு பணிகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள் 250 பேர்(நிரந்தரம்), 150 பேர்(தற்காலிகம்) என மொத்தம் 400 பேர் பணிபுரிந்து வருகின்றனர். விடுப்பு நாட்களில் விடுப்பு எடுக்காமல் பணிபுரிந்த பணியாளர்களுக்கு கடந்த 7 மாதங்களாக வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்கக்கோரி நீலகிரி மாவட்ட நகராட்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் ஊட்டி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்காக சுகாதார பணியாளர்கள் பலர் அலுவலகம் முன்பு உள்ள நுழைவாயில் பகுதியில் நேற்று திரண்டனர். ஆனால் ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. அதனை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சங்க செயலாளர் சேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பணியாளர்களை போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், பணியாளர்களுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அலுவலகத்தை பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு திருமேனி சம்பவ இடத்துக்கு வந்து சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஊட்டி நகராட்சி கமிஷனர், பொறியாளர் ஆகியோர் வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டுக்கு சென்று உள்ளதால், கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியாத நிலை உள்ளது. எனவே சங்கத்தை சேர்ந்த 6 பேர் அலுவலகத்தில் உள்ள மேலாளர் அல்லது வருவாய் அதிகாரியிடம் மனு கொடுக்க அனுமதி அளிக்கிறேன் என்று போலீஸ் துணை சூப்பிரண்டு நிர்வாகிகளிடம் கூறினார்.
அதனை தொடர்ந்து சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஆல்தொரை, நீலகிரி மாவட்ட நகராட்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க தலைவர் சங்கரலிங்கம் உள்ளிட்டோர் நகராட்சி அதிகாரியிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
நகராட்சியில் துப்புரவு பணிபுரியும் சுகாதார பணியாளர்களுக்கு சிறப்பு கிரேடு, செலக்ஷன் கிரேடு, சூப்பர் கிரேடு ஆகிய பணி உயர்வு கடந்த 2014-ம் ஆண்டு முதல் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே, உடனடியாக பணி உயர்வு வழங்க வேண்டும். வருங்கால வைப்புநிதியை நகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு செலுத்தாததால், பணியாளர்கள் கடன் வாங்க முடியாமல் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
பணி ஓய்வு பெறும் நபர்களுக்கு வருங்கால வைப்புத்தொகை வழங்கப்படுவது இல்லை. ஊட்டி நகராட்சியில் தற்காலிகமாக பணிபுரிந்து வரும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 24.9.2018 அன்று மாவட்ட கலெக்டர் அறிவித்த குறைந்தபட்ச ஊதியமான செயல் திறன் படைத்த பணியாளர்களுக்கு நாள் ஒன்று ரூ.764, சாதாரண பணியாளர்களுக்கு ரூ.571-ம் வழங்க வேண்டும். நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கப்படுவது போல் தற்காலிக பணியாளர்களுக்கு கையுறை, காலனி, சீருடை போன்ற அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்க வேண்டும்.
ஒப்பந்த பணியாளர்களுக்கு மாதந்தோறும் பி.எப்., மருத்துவ காப்பீடு பிடித்தம் செய்த விவரத்துடன் சம்பள பட்டியல் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று பணியாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அலுவலகத்துக்கு சென்றதால், பல இடங்களில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட வில்லை. இதனால் நகரில் உள்ள பல்வேறு இடங்களில் குப்பைகள் தேக்கம் அடைந்து உள்ளன.
தினமும் காலையில் நகராட்சி வாகனங்கள் மூலம் நேரடியாக வீடுகளுக்கு சென்று சேகரிக்கப்படும் குப்பைகளும் பெறப்பட வில்லை. ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் 8 டன்னுக்கு மேல் காய்கறி கழிவுகள், பழக்கழிவுகள் போன்ற குப்பைகள் தேங்கி கிடக்கிறது. பணியாளர்கள் இன்று(வெள்ளிக்கிழமை) பணிக்கு வந்தால் தான் அவை அகற்றப்படும் என தெரிகிறது.