பொள்ளாச்சி-திண்டுக்கல் 4 வழிச்சாலை பணிக்காக 10 ஆயிரம் தென்னை மரங்களை வெட்ட முடிவு
பொள்ளாச்சி-திண்டுக்கல் 4 வழிச்சாலை பணிக்கு 10 ஆயிரம் தென்னை மரங்கள் வெட்ட முடிவு செய்யப் பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி,
திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி, கோவை, சத்தியமங்கலம் வழியாக கர்நாடக மாநில எல்லை வரை தேசிய நெடுஞ்சாலை 209 செல்கிறது. இந்த சாலையில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கவும், விபத்துகளை தடுக்கவும், போக்குவரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி-திண்டுக்கல் இடையே 4 வழிச்சாலை அமைக்க ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சாலை அமைக்கும் பணி நிலம் கையகப்படுத்த வேண்டியது உள்ளது. தற்போது நிலஅளவீடு பணிகள் முடிந்து, கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு இழப்பீடு வழங்க மதிப்பீட்டு தொகை நிர்ணயம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய திட்ட அதிகாரிகள் கூறியதாவது:-
திண்டுக்கல்-ஒட்டன்சத்திரம்-கமலாபுரம் இடையே 56 கிலோ மீட்டர், ஒட்டன்சத்திரம்-மடத்துக்குளம் 45 கிலோ மீட்டர், மடத்துக்குளம்-பொள்ளாச்சி 64 கிலோ மீட்டர் என 3 பிரிவுகளாக பிரித்து 165 கிலோ மீட்டர் தூரத்துக்கு 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதில் 120 கிலோ மீட்டர் தூரத்துக்கு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதன் காரணமாக கையகப்படுத்தும் நிலங்களுக்கு இழப்பீடு தொகை கொடுக்க திட்ட மதிப்பீடு தயார் செய்ய அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. திட்ட மதிப்பீடு தயார் பணிகள் முடிந்த உடன் இழப்பீடு தொகை வழங்கப்படும்.
பொள்ளாச்சி தாலுகாவிற்கு உட்பட்ட ஆச்சிப்பட்டி, கோமங்கலம்புதூர், கிட்டசூராம்பாளையம், கோமங்கலம், கோலார்பட்டி, குரும்பபாளையம், நல்லாம்பள்ளி, புளியம்பட்டி, திப்பம்பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி, அனுப்பர்பாளையம் ஆகிய கிராமங்களில் 87.85 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கிடையில் பாலங்கள், சாலை சந்திப்புகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள கூடுதலாக 17.55 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. மேற்கண்ட கிராம பகுதிகளில் மட்டும் 11,936 மரங்கள் வெட்டப்பட உள்ளது. இதில் தென்னை மரங்கள் மட்டும் 10,095 உள்ளது. சாலை பணிக்கு வெட்டி அகற்றப்பட உள்ள மரங்களில் குறியீடும், நிலங்களில் கற்களும் நடப்பட்டு உள்ளது. கையகப்படுத்தப்படும் நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.