அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் பணி வழங்காததை கண்டித்து நடந்தது

வேலை வழங்காததை கண்டித்து அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-01-03 22:30 GMT
அரக்கோணம், 

வேலூர் மாவட்டம் அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 26 ஊராட்சிகளில் 100 நாள் வேலைத்திட்ட பணிகளில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். ஏரிகளை தூர்வாருதல், சாலை ஓரமாக மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல், பண்ணை குட்டை அமைத்தல் உள்ளிட்ட வேலைகளை செய்து வருகின்றனர்.

அரக்கோணத்தை அடுத்த முதூர் ஊராட்சிக்குட்பட்ட முதூர், இருளர் காலனி, வீரநாராயணபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் 100 நாள் வேலை திட்டத்தில் முதூர் பகுதியில் உள்ள ஏரிகளில் தூர்வாரும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு வேலை வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் நேற்று காலை முதூர் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட தொழிலாளர்கள் அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அமர்ந்து வேலை வழங்க வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் என்.சேகர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.கஜவேல், முதூர் ஊராட்சி செயலாளர் ஏழுமலை ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது முதூர் வடவாண்டை பெரிய தெருவில் வசிக்கும் 162 பேருக்கு கடந்த சில தினங்களாக வேலை வழங்கவில்லை. திடீரென வேலையை நிறுத்தியதால் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். ஆகவே எங்களுக்கு உடனடியாக நூறு நாள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.

அதற்கு 100 நாள் வேலை பணி இருந்தவரை தற்போது எல்லோருக்கும் பிரித்து கொடுத்து உள்ளோம். அடுத்த பணிக்கான விவரம் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளோம். அதற்கான உத்தரவு வந்தவுடன் மீண்டும் வேலை வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

அதைத்தொடர்ந்து கோரிக்கை மனுவை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சேகரிடம் வழங்கிவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்