வாணியம்பாடி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தை நடமாட்டம் குறித்து போனில் தகவல் தெரிவிக்கலாம் வனத்துறை அறிவிப்பு
வாணியம்பாடி அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தை நடமாட்டம் குறித்து போனில் தகவல் தெரிவிக்கலாம் என வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாணியம்பாடி,
வாணியம்பாடி அருகே வனப்பகுதியில் நடமாடும் சிறுத்தை ஆடு, மாடுகளை கடித்து, பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் கடந்த ஒருவாரமாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து 8-வது நாளாக சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்ட வனஅலுவலர் முருகன் தலைமையில், வனச்சரகர் சோழராஜன் மற்றும் வனத்துறையினர் 5 பிரிவுகளாக பிரிந்து தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள மாதகடப்பா, தும்பேரி, சிக்கணாங்குப்பம், அழிஞ்சிகுளம், மேல அழிஞ்சிகுளம் உள்ளிட்ட காப்புக்காடு பகுதியில் சிறுத்தையை பிடிப்பதற்கு கூண்டுகள் அமைத்து தேடி வருகின்றனர்.
மேலும் சிறுத்தையை பார்த்தால் உடனடியாக போனில் தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட வன அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார். சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவல் தெரிந்தால் வனச்சரக அலுவலர் சோழராஜனை 9894020880 என்ற எண்ணிலும், வனவர் பரந்தாமனை 8110056512 என்ற எண்ணிலும், வனக்காப்பாளர் முனிசாமியை 9047944765 என்ற எண்ணிலும், வனக்காவலர் செல்லப்பாவை 9786226657 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
தகவல் கிடைத்ததும் அவர்கள் விரைந்து சென்று மயக்கமருந்து செலுத்தி சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுப்பார்கள். சிறுத்தை நடமாட்டம் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.