தடையை விலக்கக்கோரி 4-வது நாளாக பிளாஸ்டிக் கடைகள் அடைப்பு
தடையை விலக்கக்கோரி ஈரோடு மாவட்டத்தில் 4-வது நாளாக பிளாஸ்டிக் கடைகள் அடைக்கப்பட்டன.
ஈரோடு,
பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் சார்பில் கடந்த மாதம் 30-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பிளாஸ்டிக் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன.
4-வது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. இதனால் தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருட்களும் விற்பனை செய்யப்படாததால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்க தலைவர் பி.கந்தசாமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தடை விதிக்கப்படாத பிளாஸ்டிக் பொருட்களையும் விற்பனை செய்ய அதிகாரிகள் விடுவதில்லை. குறிப்பாக மளிகை பொருட்கள் பொட்டலங்கள் இடப்படும் கவர்களுக்கு தடை விதிக்கப்படவில்லை. ஆனால் அந்த பிளாஸ்டிக் கவர்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்கிறார்கள்.
அதே நேரம், பெரிய நிறுவனங்களில் இருந்து பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு வரும் பொருட்களுக்கு அதிகாரிகள் அனுமதி வழங்குகிறார்கள். எனவே எந்தந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் 120 நிறுவனங்களும், 350 கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளன. இதனால் 25 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். எனவே பிளாஸ்டிக் தடைக்கு விலக்கு அளிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் சங்க செயலாளர் ஜெப்ரி, பொருளாளர் நடராஜன், துணைத்தலைவர்கள் சுரேஷ், சி.டி.குமார், ராமசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.