தன் மீது ஊழல் புகார் கூறிய ராதாகிருஷ்ண விகே பாட்டீலுக்கு வக்கீல் நோட்டீஸ் முதல்-மந்திரி பட்னாவிஸ் அனுப்பினார்

தன் மீது ஊழல் புகார் கூறிய சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீலுக்கு, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

Update: 2019-01-02 23:15 GMT
மும்பை, 

தன் மீது ஊழல் புகார் கூறிய சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீலுக்கு, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டு

மராட்டிய சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதா கிருஷ்ண விகே பாட்டீல் அண்மையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மீது பரபரப்பு ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். நகர மேம்பாட்டுத்துறையின் வளர்ச்சி திட்டம் ஒன்றில் ரூ.1 லட்சம் கோடி வரை முறைகேடு நடந்ததாக கூறிய அவர், அதில் ரு.5 ஆயிரம் கோடி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு கை மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

கட்டுமான அதிபர்கள் பயன்பெறுவதற்காக அந்த திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

முதல்-மந்திரி மீதான ராதாகிருஷ்ண விகே பாட்டீலின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வக்கீல் நோட்டீஸ்

இதைத்தொடர்ந்து தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மறுத்து உள்ள முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், ‘ராதாகிருஷ்ண விகே பாட்டீலின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. இதற்காக அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதுடன், தனது குற்றச்சாட்டுகளையும் திரும்ப பெறவேண்டும். இல்லையெனில் அவர் மீது சிவில் மற்றும் குற்றவியல் அவதூறு வழக்கு தொடரப்படும்’ என்றார்.

இந்தநிலையில், தன் மீது தவறான ஊழல் குற்றச்சாட்டு கூறியதற்காக ராதாகிருஷ்ண விகே பாட்டீலுக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுபற்றி ராதாகிருஷ்ண விகே பாட்டீலிடம் கேட்ட போது, தனக்கு இதுவரை வக்கீல் நோட்டீஸ் எதுவும் வரவில்லை, என்றார்.

மேலும் செய்திகள்