ஆரேகாலனி சினிமா ஸ்டூடியோ வளாகத்தில் செத்து கிடந்த சிறுத்தைப்புலி, மான் வேட்டையாடப்பட்டதா?
ஆரேகாலனியில் சினிமா ஸ்டூடியோ வளாகத்தில் சிறுத்தைப்புலி மற்றும் மான் செத்து கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மும்பை,
ஆரேகாலனியில் சினிமா ஸ்டூடியோ வளாகத்தில் சிறுத்தைப்புலி மற்றும் மான் செத்து கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறுத்தைப்புலி
மும்பை சஞ்சய் காந்தி தேசிய பூங்கா வனப்பகுதியில் உள்ள ஆரேகாலனி திரைப்பட நகர் சினிமா மற்றும் டி.வி. தொடர் படப்பிடிப்பு காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில், நேற்று முன்தினம் இங்குள்ள ஒரு ஸ்டூடியோ வளாகத்தில் டி.வி. தொடர் படப்பிடிப்பு நடந்து வரும் ஷெட் அருகே சிறுத்தைப்புலி அழுகிய நிலையில் செத்து கிடந்தது.
இதை பார்த்து அங்கு பணியில் இருந்த காவலாளி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுபற்றி அவர் வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
செத்து 15 நாட்கள்...
உடனடியாக அவர்கள் அங்கு விரைந்து வந்து செத்துக்கிடந்த சிறுத்தைப்புலியை கைப்பற்றினர். அப்போது, அந்த சிறுத்தைப்புலியின் 11 நகங்கள் பிடுங்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில், சிறுத்தைப்புலி உடல் கிடந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் அழுகிய நிலையில் மான் ஒன்றும் செத்து கிடந்தது. அதன் உறுப்புகளும் காணாமல் போயிருந்தன. அதையும் வனத்துறையினர் மீட்டனர்.
அவை செத்து 15 நாட்களுக்கு மேல் ஆகியிருந்தது தெரியவந்தது. அந்த சிறுத்தைப்புலியும், மானும் மர்ம ஆசாமிகளால் வேட்டையாடப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.
சினிமா ஸ்டூடியோ வளாகத்தில் வனவிலங்குகளின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.