சங்கரன்கோவில் கோர்ட்டில் பொதுமக்களுக்கு இணையதளம் மூலம் சேவை வசதி முதன்மை நீதிபதி ராஜசேகர் தொடங்கி வைத்தார்

சங்கரன்கோவில் கோர்ட்டில் பொதுமக்களுக்கு இணையதளம் மூலம் சேவை வசதியை, மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் தொடங்கி வைத்தார்.

Update: 2019-01-02 23:00 GMT
சங்கரன்கோவில்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வழக்குகளின் விவரங்களை நேரடியாக தெரிந்து கொள்ள வசதியாக தொடுதிரை வசதியுடன் கூடிய எந்திரம் மற்றும் புதிய வழக்குகளை போலீசார் மற்றும் வக்கீல்கள் பதிவு செய்ய இணையதள சேவை மையம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் கலந்து கொண்டு, இணையத்துடன் இணைந்த சேவை வசதிகளை தொடங்கி வைத்தார். தொடுதிரை எந்திரம் மூலம் கோர்ட்டு அலுவல் நேரம் முடிந்த பின்னும் வழக்கின் வாய்தா, வழக்கின் தற்போதைய நிலை, வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு ஆகியவற்றை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்வதை எளிதாக்கும் வகையில் புதிதாக இணையதள சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த இணையதள சேவை மையத்தில் புதிதாக பதிவு செய்யப்படும் புகார்களுக்கு ரசீதுகள் வழங்கப்படும். அதனை தொடர்ந்து புகார் மனு ஏற்கப்படும் பட்சத்தில் அந்த வழக்கிற்கு சிஎன்ஆர் நம்பர் வழங்கப்படும். வழக்கு மேல் கோர்ட்டுகளில் மேல் முறையீடு செய்யும் பட்சத்தில் அதுதொடர்பான விவரங்கள் புகார்தாரருக்கு அவ்வப்போது தகவல் அனுப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு குறுஞ்செய்தி மற்றும் இமெயில் மூலம் தகவல்களை பெற புகாரின் போது தங்களது அலைபேசி எண் மற்றும் இமெயில் முகவரி ஆகியவற்றை புகார் மனுவில் குறிப்பிட்டு இருப்பது அவசியம். இதன் மூலம் வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்ளும் வசதியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி சொர்ணகுமார், மாவட்ட உரிமையியல் நீதிபதி மாரிக்காளை, குற்றவியல் நடுவர் கோர்ட்டு நீதிபதி அகிலாதேவி மற்றும் வழக்கறிஞர்கள், கோர்ட்டு ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்