மஞ்சூர் அருகே சம்பவம, குட்டிகளை காப்பாற்ற சிறுத்தைப்புலியிடம் தன்னுயிரை இழந்த நாய்

மஞ்சூர் அருகே குட்டிகளை காப்பாற்ற சிறுத்தைப்புலியிடம் போராடிய நாய் தன்னுயிரை இழந்தது.

Update: 2019-01-02 22:30 GMT
மஞ்சூர்,

பெற்ற பிள்ளைக்கு ஏதாவது ஒருவகையில் இன்னல் வந்தால் இதயம் நொறுங்கிப்போவது முதலில் தாய்தான். பத்து மாதம் சுமந்து பெற்றதோடு கடமையை முடித்துக்கொள்ளாமல், குழந்தை பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து ஆளாகும்வரையிலும் அவளது இமைகள் தூங்குவதில்லை. இந்த தாய்மை உணர்வு மனிதர்களுக்கு மட்டும் அல்ல. விலங்கினத்துக்கும் பொருந்தக்கூடியதுதான். ஆம்...நீலகிரி மாவட்டத்தில் தான் அந்த நிஜம் அரங்கேறியது. அது பற்றி பார்க்கலாம்:-

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே மேல்குந்தா பகுதியில் அம்பேத்கர் நகர் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு மணிராஜ் என்பவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்தார். அந்த நாய் சமீபத்தில் 4 குட்டிகளை ஈன்றது.

அந்த குட்டிகளை விட்டு பிரியாமல் எப்போதும் அந்த நாய் காணப்பட்டது. குட்டிகளும் தாயிடம் பால் குடித்துவிட்டு அதனுடனே படுத்து உறங்கும். சில நேரங்களில் தாயின் அன்பில் திளைத்துப்போய் அதன் மீது ஏறி, இறங்கி விளையாடுவது அனைவரையும் கவரக்கூடியது. பாசத்துடன் விளையாட தாயின் துணையும், பசிவந்தால் தீர்க்க தாய் மடியில் உள்ள வற்றாத பாலும் கிடைத்ததால் அந்த நாய்குட்டிகளுக்கு அதைவிட சொர்க்கம் இல்லாதது போலவே துள்ளியது. இந்த நிலையில் அந்த குட்டிகளை மணிராஜ், இரவு வேளைகளில் அங்குள்ள கூண்டுக்குள் பாதுகாப்புக்காக அடைத்து வைப்பது வழக்கமாக இருந்தது.

இதனை நோட்டமிட்ட வில்லனாக சிறுத்தைப்புலி ஒன்று நேற்று முன்தினம் அதிகாலையில் அங்கு வந்தது. மணிராஜின் வீட்டு வளாகத்துக்குள் சென்ற அந்த சிறுத்தைப்புலி, அங்கு கூண்டில் இருந்த நாய் குட்டிகளை கவ்வி செல்ல தருணம் பார்த்தது. அப்போது அங்கு படுத்திருந்த தாய் நாய் அதனை கண்டது. உடனே அந்த தாய் நாய் தனது குட்டிகளை காக்க, சிறுத்தைப்புலி என்றும் பாராமல் தன்னிடம் உள்ள முழு பலத்துடன் அதனை விரட்ட முயன்றது. ஆனால் சிறுத்தைப்புலியின் சீற்றம் அதனை கதிகலங்க வைத்து விட்டது.சாதாரண நாயாக இருந்தபோதும், வீரத்தாயின் ஆவேசம் அதனுடன் இருந்தது. விடாமல் சிறுத்தைப்புலியுடன் போராடியது.

அதனை பார்த்து கூண்டுக்குள் இருந்தவாறு குட்டிகள், அதன் கம்பிகளில் கால்களை பற்றிப்பிடித்தவாறு, பாசத்துடன் செய்வதறியாமல் குரைத்து, குரைத்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தின.

இதற்கிடையில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டதும், மணிராஜ் வீட்டிற்குள் இருந்து வெளியே ஓடி வந்தார். அப்போது தாய் நாய், சிறுத்தைப்புலியிடம் போராடி தோற்றுக்கொண்டிருந்தது. முடிவில் சிறுத்தைப்புலி அந்த நாயை கவ்வி கொண்டு சிறுத்தைப்புலி அங்கிருந்து வனப்பகுதிக்குள் தப்பி ஓடியது. பெற்ற குழந்தைகளை காக்க வீரத்துடன் போராடி தன்னுயிரை விட்ட தாய் நாயின் தியாகத்தை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இருந்தபோதும் பாசத்தின் பிரிவு அந்த குட்டிகளின் முகங்களில் தெரிவதை பார்த்து கவலை அடைந்தார். இது குறித்து உடனே அவர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர். இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

குட்டிகளை காப்பாற்ற தாய் நாய், வீரத்துடன் போராடி வீழ்ந்து விட்டது. தாய் நாயை சிறுத்தைப்புலி கவ்வி சென்று விட்டதால், தாயை காணாமல் குட்டிகள் தவித்து கொண்டு இருக்கின்றன. இதை பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது. அடிக்கடி சிறுத்தைப்புலி குடியிருப்புக்குள் புகுந்து, வளர்ப்பு பிராணிகளை கவ்வி செல்வது தொடர்ந்து வருகிறது.

இது பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே அந்த சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்