மாயமான 4-ம் வகுப்பு மாணவன் குட்டையில் பிணமாக மீட்பு போலீசார் விசாரணை

மார்த்தாண்டம் அருகே மாயமான 4-ம் வகுப்பு மாணவன் குட்டையில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.;

Update: 2019-01-02 23:00 GMT
குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே உள்ள கொடுங்குளம் மதில்விளை பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 35), மரவேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சவுமியா (31). இவர்களுடைய மகன் ஹரிபிரசாத் (10). சுபாஷ் தற்போது நாகர்கோவில் வாட்டர்டேங்க் ரோடு பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

ஹரிபிரசாத், வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி. நாகர்கோவிலில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். அரையாண்டு விடுமுறையையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹரிபிரசாத் பெற்றோருடன் சொந்த ஊருக்கு சென்றான்.

நேற்று முன்தினம் காலை மாணவன் ஹரிபிரசாத் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விளையாடினான். மதியம் சவுமியா, தனது மகனை சாப்பிட அழைக்க சென்றார். அப்போது, அங்கு விளையாடிக்கொண்டிருந்த மகனை காணவில்லை. இதனால் பதற்றமடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அப்பகுதியில் தேடினார்.

அப்போது, ஒரு சிலர், சிறிது நேரத்துக்கு முன் அப்பகுதிக்கு ஒரு ஐஸ் வியாபாரி வந்ததாகவும், அவர் மாணவனை கடத்தி சென்றிருக்கலாம் என்று கூறினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. உடனே இதுபற்றி மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், ஐஸ் வியாபாரி மாணவனை கடத்தி செல்லவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மாணவன் என்ன ஆனான்? எங்கு சென்றான்? என்று தெரியாமல் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பதற்றத்தில் இருந்தனர்.

அதை தொடர்ந்து சவுமியா, தனது மகனை கண்டுபிடித்து தரும்படி மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து ஹரிபிரசாத்தை தேடினர்.

இந்த நிலையில் நேற்று காலை அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் உள்ள குட்டையில் ஒரு சிறுவனின் உடல் பிணமாக மிதந்தது. இதனை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த சம்பவம் காட்டுத் தீ போல அனைத்து இடங்களுக்கும் பரவியது. உடனே அங்கு அனைவரும் ஓடிச் சென்று பார்த்த போது, மாயமான ஹரிபிரசாத் பிணமாக மிதந்தது தெரிய வந்தது. மேலும் தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விளையாட்டு ஆர்வ மிகுதியில் ஹரிபிரசாத் செங்கல்சூளை பகுதிக்கு சென்றிருக்கலாம் என்றும், அப்போது குட்டையில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான மாணவன், குட்டையில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்