ஏழைகளுக்கு உதவ கோவில்பட்டி பஸ் நிலையத்தில் ‘கருணை பெட்டகம்’ திறப்பு
ஏழைகளுக்கு உதவும் வகையில் கோவில்பட்டி பஸ் நிலையத்தில் ‘கருணை பெட்டகம்’ திறக்கப்பட்டு உள்ளது.
கோவில்பட்டி,
கோவில்பட்டி அண்ணா பஸ் நிலைய வளாகத்தில் துளிர் இளைஞர் சக்தி சமூக நற்பணி இயக்கம் சார்பில், கருணை பெட்டகம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.
நகரசபை ஆணையாளர் அட்சயா தலைமை தாங்கி, கருணை பெட்டகத்தை திறந்து வைத்தார். பின்ன ஆணையாளர் கூறியதாவது:- ஆதரவற்றவர்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், ஏழைகளுக்கு உதவிடும் வகையில் கருணை பெட்டகம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் பொதுமக்கள் தங்களது தேவைக்கு அதிகமான மற்றும் பயன்படுத்தக்கூடிய உணவுப்பொருட்கள், உடைகள், புத்தகங்கள், காலணிகள் போன்றவற்றை வைக்கலாம்.
இந்த பெட்டகத்தில் முதலுதவி சிகிச்சைக்கு தேவையான மருந்துகள், நாப்கின்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதில் கெட்டுப்போன உணவுப்பொருட்கள், பயன்படுத்த முடியாத பொருட்களை வைக்க வேண்டாம். இதற்கு பொதுமக்கள், வணிகர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இதேபோன்று கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி, ரெயில் நிலையம், மார்க்கெட் உள்ளிட்ட இடங்களிலும் கருணை பெட்டகம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.