மதுவில் விஷம் கலந்து குடித்த நண்பர்கள்; ஒருவர் சாவு மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை

தக்கலை அருகே நெருங்கிய நண்பர்கள் மதுவில் விஷம் கலந்து குடித்தனர். இதில் ஒருவர் பரிதாபமாக இறந்தார். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2019-01-02 22:15 GMT
பத்மநாபபுரம்,

குமரி மாவட்டம் தக்கலை அருகே பள்ளியாடி கஞ்சிக்குழி பகுதியை சேர்ந்தவர் பீட்டர் பால் (வயது 38), கொத்தனார். அதே பகுதியை சேர்ந்தவர் ராஜூ (42). இவர் டெம்போ டிரைவராக உள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, 2 குழந்தைகளும் உள்ளனர். பீட்டர் பாலும், ராஜூம் நெருங்கிய நண்பர்கள் ஆவர்.

நண்பர்கள் இருவரும் சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தனர். இதனால் இருவரையும் ஒழுங்காக வேலைக்கு செல்லும்படி இருவருடைய குடும்பத்தினரும் வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது. மேலும் நீங்கள் 2 பேரும் அடிக்கடி தனியாக சந்திக்கக்கூடாது என்று கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக இருவரும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டனர்.

இந்த நிலையில் புத்தாண்டு தினத்தன்று இருவரும் தற்கொலை செய்ய முடிவு எடுத்துள்ளனர். இதற்காக அன்றைய தினம் மதுபாட்டில், விஷ பாட்டில் வாங்கி விட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லறை தோட்டத்துக்கு சென்றனர்.அங்கு இருவரும் மனம்விட்டு பேசினர். இருவரும் ஒன்றாக சேர்ந்து சுற்றுவதை குடும்பத்தினர் கண்டிப்பதால், வாழ்வதை விட சாவதே மேல் என்று பேசிக்கொண்டு மதுவில் விஷம் கலந்து குடித்தனர்.

பின்னர் பீட்டர்பால் தன்னுடைய குடும்பத்தினருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கல்லறை தோட்டத்தில் வைத்து விஷம் குடித்து விட்டதாகவும், தன்னுடைய இறுதி சடங்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்ததாக தெரிகிறது. அதேபோல் ராஜூவும் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு கல்லறை தோட்டத்தில் பீட்டர்பால், ராஜூ ஆகிய 2 பேரும் உயிருக்கு போராடினர். உடனே இருவரையும் மீட்டு கருங்கல் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக பீட்டர் பாலை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கும், ராஜூவை திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர்.

இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் பீட்டர் பால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். ராஜூவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பீட்டர் பாலின் சகோதரர் ஆல்வின் ஜோஸ் (42) கொடுத்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நண்பருடன் சேர்ந்து மதுவில் விஷம் கலந்து குடித்ததில் கொத்தனார் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்