மதுரை அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. ரத்தம் கொடுத்த வாலிபரின் உடல் பிரேத பரிசோதனை; வீடியோ பதிவும் செய்யப்பட்டது
எச்.ஐ..வி. ரத்தம் கொடுத்த வாலிபரின் உடல் ஐகோர்ட்டு உத்தரவின்படி பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அந்த காட்சிகள் வீடியோ பதிவும் செய்யப்பட்டது.;
மதுரை,
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த 19 வயது வாலிபர், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் ரத்த தானம் செய்தார். அவர் தானமாக வழங்கிய ரத்தம், சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டது. அந்த ரத்தத்தில் எச்.ஐ.வி. பாதிப்பு இருந்ததை தொடர்ந்து அந்த பெண்ணும் எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளானார்.
இந்த விவகாரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த வாலிபர் கடந்த 26–ந்தேதி கமுதியில் விஷம் தின்று தற்கொலைக்கு முயன்றார். மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 30–ந்தேதி காலையில் அந்த வாலிபர் திடீரென இறந்தார்.
அவரது சாவில் மர்மம் இருப்பதாக குற்றம்சாட்டிய உறவினர்கள், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். மேலும் வேறு மாவட்ட அரசு டாக்டர்களை வைத்து பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்றும், அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நெல்லை, தேனி, சிவகங்கை மருத்துவக் கல்லூரிகளில் ஏதாவது ஒன்றின் 2 மருத்துவ நிபுணர்களை கொண்டு பிரேத பரிசோதனை நடத்தவும், அதனை வீடியோவில் பதிவு செய்யவும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து மதுரை பெரிய அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக தேனி மருத்துவ கல்லூரியை சேர்ந்த தடயவியல் துறை பேராசிரியர்கள் அருண்குமார், சந்திரசேகர் ஆகியோர் நேற்று காலை மதுரை வந்தனர். அவர்களுடன் மதுரை அரசு மருத்துவ கல்லூரியை சேர்ந்த பேராசிரியர்கள் ஜூலியானா, சதாசிவம் ஆகியோரும் பிரேத பரிசோதனை செய்ய தயாரானார்கள்.
அந்த சமயத்தில், மதுரை பெரிய ஆஸ்பத்திரி டீன் சண்முகசுந்தரம், பிரேத பரிசோதனை செய்யும் டாக்டர்கள் பெயரை பதிவு செய்வதற்காக மதுரை ஐகோர்ட்டிற்கு சென்றிருந்தார். இதுபோல், வீடியோ பதிவுக்கான பணிகள் முடிவடையாமல் இருந்த காரணத்தால், பிரேத பரிசோதனை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து பிற்பகல் 2.30 மணியளவில் அந்த டாக்டர் குழுவினர் பிரேத பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். எச்.ஐ.வி. பாதிப்பால் இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மருத்துவத்துறை விதித்துள்ள வழிகாட்டுதலின் படி இதற்கென ஒருமுறை பயன்படுத்தக்கூடிய முகத்திரை, தனி கையுறை போன்ற உபகரணங்கள் உதவியுடன் டாக்டர்கள் குழுவினர் பிரேத பரிசோதனையை மேற்கொண்டனர். மாலை 4 மணியளவில் பிரேத பரிசோதனை முடிவடைந்தது. இவை அனைத்தும் வீடியோ மூலம் பதிவும் செய்யப்பட்டது.
பிரேத பரிசோதனைக்கு பின்னர், வாலிபரின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலம் உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.