தை மாதத்தை வருடத்தின் முதல் மாதமாக குறிப்பிடும் பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

கீழக்கரையில் தை மாதத்தை வருடத்தின் முதல்மாதமாக குறிப்பிடும் பழங்கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுஉள்ளது.

Update: 2019-01-02 23:30 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள ஜும்மா பள்ளிவாசலில் காலச்சக்கர பழங்கால கல்வெட்டு ஒன்று உள்ளது. அந்த கல்வெட்டில் தை மாதத்தை தமிழ் வருட ஆரம்ப மாதமாக குறிக்கப்பட்டு உள்ளது. அதாவது சூரியன் உத்ராயணத்தில் பிரவேசிக்கும் மாதமாகிய தை மாதத்தில் ஆரம்பித்து ஆனியில் முடிவுற்று பின் அங்கிருந்து தட்சனாயணத்தில் பிரவேசிக்கும் மாதமாகிய ஆடியில் ஆரம்பித்து மார்கழியில் முடிவடைகிறது.

முற்காலத்தில் கோள்களின் சுழற்சியை அடிப்படையாக கொண்டே காலத்தை கணித்துள்ளார்கள். பூமியின் சுழற்சியால் சூரியன் பூமியின் தென்பகுதியில் இருந்து வடபகுதியின் கடைசிக்கும், வடபகுதியில் இருந்து தென்பகுதியின் கடைசிக்கும் செல்ல முறையே 6 மாத காலங்கள் எடுத்துக்கொள்கிறது. இதற்கு முறையே உத்தராயணம் என்றும் தட்சனாயணம் என்றும் கூறப்படுகிறது. ஒரு வருடத்தை 12 ராசிகளாக பிரித்துள்ளார்கள். ஒவ்வொரு ராசியிலும் சூரியன் பிரவேசிக்கும் நாட்களே அந்த மாதத்தின் மொத்த நாட்களாக கணக்கிட்டுள்ளனர். சூரியன் உத்ராயணத்தில் பிரவேசிக்க தொடங்கும் முதல் மாதமே வருடத்தின் முதல் மாதம் என்றும் அதுவே தை மாதம் எனவும், சூரியன் உச்சம் பெரும் மாதம் சித்திரை என்றும், அவ்வாறு சூரியன் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி உத்தராயணத்தில் (மகர ராசியில்) பிரவேசிக்கும் காலமே சிறந்த உத்தம காலம் என்றும் ஜோதிட வல்லுனர்களின் கணிப்பாக உள்ளது.

தை மாதத்தில் அதிக வெப்பம் மற்றும் அதிக குளிர் இல்லாமல் இதமான சூழல் இருக்கும். தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப சுப காரியங்கள் இந்த மாதத்தில் ஆரம்பிப்பதும், செயல்படுத்துவதும் சிறப்படையும் என்ற நம்பிக்கை மக்களிடம் உண்டு. மார்கழியில் அறுவடை முடித்து புது அரிசி கொண்டு சூரியனுக்கு பொங்கலிட்டு உழவர்கள் தை மாதத்தை வரவேற்கின்றனர். இந்த வழக்கம் பண்டைய காலத்தில் இருந்தே தொடர்கிறது என்பதை இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. ராஜராஜசோழன் தன் களஞ்சியத்தில் உள்ள பழைய தானியங்களை எடுத்து தர்மம் செய்துவிட்டு புதிய தானியங்களை கொள்முதல் செய்துவிடுவாராம். இதுபோன்ற பல சிறப்புகள் தை மாதத்திற்கு இருந்து வருகிறது.

இதன்படி 2006–11–ம் காலத்தில் இருந்த தமிழக அரசு தை மாத பிறப்பை தமிழ் புத்தாண்டாக அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு ஏற்பும், சிலரின் எதிர்ப்பும் இருந்து வந்தது. இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இந்த அறிவிப்பை நீக்கி மீண்டும் சித்திரை மாதத்தின் முதல் தேதியே தமிழ் புத்தாண்டு பிறப்பாக அறிவிக்கப்பட்டது. தற்போது காணப்பட்டுள்ள முன்னோர்களின் பழங்கால கல்வெட்டு தை மாதத்தை தமிழ் மாதத்தின் தொடக்க மாதமாக ஆரம்பித்துள்ளதை நிரூபித்துள்ளது. 300 ஆண்டுகளுக்கு முன்பு தை மாதத்தை தமிழ் வருடத்தின் முதல் மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கலாம் என்பதற்கு சான்றாக இந்த பழங்கால கல்வெட்டு உள்ளது. இந்த தகவலை கீழக்கரை வரலாற்று தொல்லியல் ஆய்வாளர் விஜயராமு தெரிவித்தார்.

மேலும் செய்திகள்